DMK and ADMK MLA are Collaboration at Assembly
ஜெயலலிதா உயிருடன் இருக்கும் வரை அனல் தகித்து வந்த தமிழக சட்டசபையில் தற்போது அன்பு மழை பொழிந்து வருகிறது. முதல் அமைச்சராக ஜெயலலிதா இருந்த கால கட்டத்தில் மானியக்கோரிக்கைகள் மீதானா விவாதமாக இருக்கட்டும், ஆளுநர் உரை மீதான நன்றி தெரிவிப்பு கூட்டமானாலும் தமிழக சட்டசபையில் அதிமுகவினர் ஜென் நிலையைப் போ பின் டிராப் சைலண்டை கடைபிடிப்பார்கள்.
எதிர்க்கட்சித் தலைவருக்கு ஜெயலலிதா பதில் அளிக்கும் போது, அல்லது அரசின் சாதனைகளை அவர் விளக்கிக் கூறும் போது மட்டுமே அதிமுக எம்.எல்.ஏ.க்கள், அமைச்சர்கள், தங்களது தவத்தை கலைத்து மேஜையை தட்டி ஓலி எழுப்புவார்கள்..
கேள்வி பதில் நேரத்தின் போது, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் துறைசார்ந்த கேள்விகளை முன்வைத்தால், ஒருவித தயக்கத்துடனே அதிமுக அமைச்சர்கள் அதற்கு பதில் அளிப்பார்கள்.
ஜெயலலிதா உயிருடன் இருக்கும் வரை இப்படி ராணுவக் கட்டுப்பாட்டுடன் இருந்து வந்த அதிமுக உறுப்பினர்கள், தற்போது முதல் முறையாக சுதந்திரக் காற்றை சுவாசித்தது போல உணரத் தொடங்கியிருக்கின்றனர்.

எடப்பாடி பழனிச்சாமி அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பின் போது தமிழக சட்டசபை போர்க்களமாகவே மாறியிருந்தது அனைவரும் அறிந்த ஒன்றே. கூவத்தூரில் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் அடைத்து வைக்கப்பட்டிருந்ததால், அவர்கள் ஒருவித அச்ச உணர்வுடனே வாக்களிப்பார்கள். எனவே ரகசிய வாக்கெடுப்பை நடத்த பேரவைத் தலைவர் அனுமதிக்க வேண்டும் என்று எதிர்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினார்.
ஆனால் ரகசியவாக்கெடுப்பு நடத்த முடியாது என்று கூறி எம்.எல்.ஏ.க்களை எண்ணி வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த திமுக உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர்.
இப்படி சுள்ளென சுட்டெரித்த வந்த தமிழக சட்டசபை, தற்போது புன்சிரிப்புகளும், ஹாய் மச்சான்ஸ் என்ற நலம்விசாரிப்புகளாலும் அவையை அன்பால் அதிரச் செய்து வருகின்றனர் அதிமுக உறுப்பினர்கள். காரசார விவதாக் களமாக இருந்த அவை தற்போது கலகலப்பாக மாறியுள்ளது.
மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடத்துவதற்காக தமிழக சட்டசபை கடந்த 14 ஆம் தொடங்கியது. அதிமுக எம்.எல்.ஏ.க்களிடம் நடத்தப்பட்ட குதிரை பேரம் குறித்து விவாதிக்க அனுமதிக்க வேண்டும் என்று எதிர் கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினார். இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால் குதிரை பேரம் குறித்து விவாதிக்க அனுமதிக்க முடியாது என்றார். இதனைத் தொடர்ந்து அவையில் மீண்டும் அமளி. திமுக உறுப்பினர்கள் அனைவரும் கூண்டோடு வெளியேற்றப்பட்டனர்.
தொடர்ந்து இரண்டு நாட்கள் பேரவையில் இருந்து திமுகவினர் வெளிநடப்பு செய்து தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.இப்படி சுட்டெரிக்கும் பாலைவனமாக இருந்து வந்த தமிழக சட்டமன்றத்தில் திடீர் மாற்றம்.

அதிமுக எம்.எல்.ஏ.தங்கதமிழ்ச்செல்வன், ஆதரவு கட்சி உறுப்பினர்கள், கருணாஸ், தமீமுன் அன்சாரி, ஆகியோரது வெளிநடப்புகளுக்குப் பின்னர் சூடு தணிந்து சூப்பராகச் சென்று கொண்டிருக்கிறது.
நல்ல கேள்வியை கேடட்டீங்க என்று அதிமுக எம்.எல்.ஏ. தங்கதமிழ்ச்செல்வனை திமுக உறுப்பினர்கள் கைகுழுக்கி பாராட்டுத் தெரிவித்ததும், இதுல என்னங்க அண்ணா இருக்கு என்று தங்கமாக தங்கதமிழ்ச்செல்வன் பதில் அளித்ததும் காணக் கிடைக்காத காட்சிகள்.
நீட் தேர்வு விவகாரம் தொடர்பாக திமுக உறுப்பினர் ஒருவர் கேள்வி ஒன்றை முன்வைத்தார். இதனை பொறுமையாக கேட்ட சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், நல்ல கேள்வியை கேட்டீங்க என்று முதலில் அவரைப் பாராட்டிவிட்டே அதற்கான பதிலை அளித்தார்.
கடந்த வெள்ளிக்கிழமை சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் பிற்பகல் 2 மணி அளவிலேயே நிறைவடைந்தது. சனிக்கிழமை கூட்டத் தொடர் இல்லை என்பதாலும், ஞாயிறு அரசு விடுமுறை, திங்கள் ரம்ஜான் தினம் என்பதால், சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது சொந்த ஊருக்குச் சொல்ல வசதியாக கூட்டம் முன்கூட்டியே முடிக்கப்பட்டது.
பேரவையை விட்டு வெளிவந்த அதிமுக உறுப்பினர்கள், திமுக உறுப்பினர்களைப் பார்த்து மச்சா பாத்து பத்திரமா போயிட்டு வாங்க செவ்வாய்க் கிழமை பார்க்கலாம் என்று அன்பு மொழி பொழிய அளவலாவியதும் காண முடிந்தது.
