காட்பாடி காந்தி நகர் 10-வது கிழக்கு குறுஞ்சாலையைச் சேர்ந்தவர் பாபு இவர், அணைக்கட்டு திமுக ஒன்றியச் செயலாளராக பொறுப்பு வகித்து வருகிறார்.

கடந்த சட்டப்பேரவை தேர்தலில் திமுக சார்பில் அணைக்கட்டு தொகுதியில் போட்டியிட விருப்ப மனு அளித்தார். ஆனால், மத்திய மாவட்டச் செயலாளர் ஏ.பி.நந்தகுமாருக்கு கட்சி தலைமை சீட் வழங்கியது. இதனால், பாபு ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆனாலும்  கட்சி தலைமை கேட்டுக்கொண்டதால், ஏ.பி.நந்தகுமார் வெற்றிக்கு பாபு ஒத்துழைத்தார்.

இந்நிலையில் பாபுவை கடந்த இரண்டு நாட்களாக காணவில்லை என்று அவரது மனைவி  காட்பாடி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அதில் கடந்த 23-ம் தேதி காலை 9 மணிக்கு பாபு வீட்டிலிருந்து கடைக்கு செல்வதாகக் கூறிவிட்டுச் சென்றார். பகல் 11 மணிக்கு அவரை தொடர்பு கொண்டபோது வெளியே இருப்பதாகக் கூறினார். அதன்பிறகு மதியம் அவர் வீட்டுக்கு வரவில்லை. இதையடுத்து, அவரது செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொண்ட போது, சுவிட் ஆஃப் செய்யப்பட்டிருந்தது.

கடைக்கு போன் செய்து பார்த்தபோது, அங்கு பாபு வரவில்லை என ஊழியர்கள் தெரிவித்தனர். அன்றிரவு வரை அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை. இந்நிலையில், 2-வது நாளாக அவர் எங்கே இருக்கிறார் என தெரியவில்லை. அரசியல் மற்றும் தொழில் ரீதியாக முக்கிய பிரமுகர் என்பதால் அவரை யாராவது கடத்திச் சென்றிருப்பார்களா? என சந்தேகம் எழுகிறது. எனவே, அவரை கண்டுபிடித்து தர வேண்டும் என்று அந்த புகாரில் தெரிவித்திருந்தார்.

இதையடுத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் செம்மரக் கடத்தல் வழக்கு விசாரணைக்காக பாபுவை ஆந்திர காவல் துறையினர் கைது செய்து அழைத்துச் சென்னறது தெரிய வந்தது. அவரிடம் ஆந்திர போலீசார் கடுமையாக விசாரித்து வருகிறார்கள் என கூறப்படுகிறது.