ஆம்பூர் தொகுதி திமுக எம்.எல்.ஏ.வின் செருப்பை தலித் நிர்வாகி கையில் தூக்கி வந்தது சர்ச்சையாகி உள்ளது.


திருப்பத்துார் மாவட்டம் ஆம்பூர் தொகுதி திமுக எம்.எல்.ஏ. விஷ்வநாதன், பொன்னப்பள்ளி கிராமத்தில் தடுப்பணையை பார்வையிட சில தினங்களுக்கு முன்பு சென்றார். மழை பெய்ததால் அந்தப் பாதை சகதியாக இருந்தது. எனவே, எம்.எல்.ஏ. விஷ்வநாதன் செருப்பை கழற்றிவைத்துவிட்டு நடந்து சென்றார். ஆனால், திமுகவைச் சேர்ந்த வெங்கடசமுத்திரம் ஊராட்சி செயலாளர் சங்கர், எம்எல்ஏவின் செருப்பை கையில் துாக்கிக்கொண்டு உடன் சென்றார்.
இந்த காணொலி காட்சி தற்போது சமூக ஊடங்களில் வேகமாகப் பரவிவருகிறது. ஏற்கனவே திமுக எம்.பி.க்கள் ஆர்.எஸ். பாரதி, தயாநிதி மாறன், திமுக எம்.எல்.ஏ. தியாகராஜன் ஆகியோர் தலித்திகளையும், குலத்தொழிலையும் குறிப்பிட்டு பேசியது சர்ச்சையாகி, தற்போதுதான் ஓய்ந்தது. இந்நிலையில் தலித் சமூகத்தைச் சேர்ந்த திமுக நிர்வாகி, செருப்பை தூக்கிச் சென்றது சர்ச்சையாகி உள்ளது. 'தலித் நிர்வாகியை செருப்பை துாக்கி வரச்சொல்வதா?’ என திமுகவின் மீது விமர்சனங்கள் வைத்துவருகிறார்கள்.

 
இந்தச் சர்ச்சையை செருப்பை தூக்கி வந்த திமுக நிர்வாகி சங்கர் மறுத்துள்ளார். ‘செருப்பை எம்.எல்.ஏ. கழற்றி வைத்துவிட்டுதான் நடந்து வந்தார். முட்கள் அதிகம் இருந்ததால், நான்தான் செருப்பை தூக்கி வந்தேன். தலித் சமுதாயத்தைச் சேர்ந்த என்னை பகடையாக்க வேண்டாம்’ என்று தெரிவித்துள்ளார்.