கூட்டணி விவகாரத்தில் பா.ஜ.கவை தி.மு.க விரட்டி விரட்டி அடிக்கும் நிலையிலும் அக்கட்சியின் மேலிடம் தி.மு.கவை சுற்றி சுற்றி வருவதற்கு காரணம் இருக்கிறது.

வரும் ஏப்ரல் அல்லது மே மாதம் நாடாளுமன்றத்திற்கு தேர்தல் நடைபெற உள்ளது. கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது இருந்த சூழல் தற்போது இல்லை. அப்போது ஆண்ட காங்கிரஸ் அரசுக்கு எதிராக காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை வெறுப்பு இருந்தது. இதன் வெளிப்பாடே மோடி அலையாகி பா.ஜ.க தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடிக்கும் நிலை ஏற்பட்டது. அனால் தற்போதைய சூழல் கடந்த தேர்தலின் சூழலை ஒப்பிடும் போது முற்றிலும் மாறுபட்டு உள்ளது. 

காங்கிரஸ் அரசு சேர்த்து வைத்த அளவிற்கு எதிர்ப்பு இல்லை என்றாலும் மோடி அரசின் மீது சாமான்ய மக்களுக்கு வெறுப்பு ஏற்பட்டிருப்பது உண்மை தான். ஆனால் அந்த வெறுப்பு மட்டுமே காங்கிரஸ் கட்சியை மீண்டும் ஆட்சிப் பொறுப்பில் ஏற்றி வைத்துவிடாது. ஏனென்றால் காங்கிரஸ் மீதான எதிர்ப்பும், வெறுப்பும் இன்னும் சாமான்ய மக்களுக்கு இருக்கவே செய்கிறது. எனவே நாடாளுமன்ற தேர்தல் வியூகத்தை சரியாக வகுத்துவிட்டால் மீண்டும் காங்கிரஸ் ஆட்சிக்கு வருவதை தடுத்துவிடலாம் என்பது தான் மோடியின் நம்பிக்கை. 

இதற்காகத்தான் காங்கிரஸ் வலுவான கூட்டணி அமைத்துவிடாமல் தடுக்க பா.ஜ.க மறைமுகமாக காய்களை நகர்த்தி வருகிறது. காங்கிரஸ் பலவீனமாக உள்ள மாநிலங்களில் அந்த கட்சி யாருடனும் கூட்டணி சேர்ந்துவிடாமல் பார்த்துக் கொள்ளும் பொறுப்பு ராம் மாதவுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. அவரும் மேற்குவங்கம், உத்தரபிரதேசம், ஒடிசா, பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் காங்கிரசுக்கு எதிராக மிகத் தீவிரமான வியூகங்களை வகுத்து செயல்பட்டு வருகிறார். 

அதே சமயம் மாநில கட்சிகள் ஆதிக்கம் உள்ள மாநிலங்களில் பா.ஜ.க கூட்டணி என்கிற பிரம்மாஸ்திரத்தை தான் நம்பியுள்ளது. அந்த வகையில் தமிழகத்தை பொறுத்தவரை கூட்டணியை மிக முக்கியமாக பா.ஜ.க கருதுகிறது. தேர்தலுக்கு முன்பும் சரி பின்பும் சரி தமிழகத்தை சேர்ந்த ஒரு கட்சியின் ஆதரவு தனக்கு தேவை என்பதை மோடி நன்கு புரிந்து வைத்திருக்கிறார். அதிலும் அ.தி.மு.கவோடு கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொள்வது என்பதில் மோடி உறுதியாக உள்ளார். 

ஆனால் தேர்தலுக்கு பின்னர் அ.தி.மு.க உதவாது என்பதும் மோடிக்கு நன்றாகவே தெரிந்துள்ளது. அதனால் தான் தி.மு.க எவ்வளவு விரட்டினாலும் கூட்டணி விவகாரத்தில் பா.ஜ.க இறங்கி வருகிறது. அதாவது என்ன தான் அ.தி.மு.கவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டாலும் தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியை பெற முடியாது. ஆனால் தி.மு.கவிற்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. எனவே தேர்தலுக்கு முன்பு இல்லாவிட்டாலும் பின்பு பயன்படும் என்பதற்காகவே தி.மு.க விவகாரத்தில் மோடி சாப்ட் மைன்ட் செட்டில் உள்ளதாக சொல்லப்படுகிறது.

நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு பா.ஜ.கவை தி.மு.க ஆதரிக்க வேண்டிய நிலை வந்தால் அப்போது தேர்தலுக்கு முன்பே மோடி எங்களை அழைத்தார் என்கிற ஒரு விஷயத்தை அக்கட்சி தலைவர்கள் பயன்படுத்த ஏதுவாகவே மோடி சிக்னல் கொடுத்து வருவதாகவும் கூறப்படுகிறது.