உள்ளாட்சித் தேர்தல் தேதி என்பதை ஜாதகம் பார்த்து, ஜோசியம் பார்த்து முடிவு செய்துள்ளார்கள் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் விமர்சனம் செய்துள்ளார். 

தருமபுரி மாவட்டம் அரூரில் அமமுக நிர்வாகி வி.டி.கருணாகரன் இல்லத் திருமண வரவேற்பு விழாவில் அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். பின்னர், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் ஆணையம் என்பது ஒரு சுதந்திரமான ஆணையம் என்று பேசி வருகிறார். அவர் ஒருவரை தூக்கி வைத்து பேசினாலே, அவர் பொய் சொல்கிறார் என்பதுதான் அர்த்தம். தற்போது அறிவிக்கப்பட்டுள்ள உள்ளாட்சித் தேர்தல் தேதி என்பதை ஜாதகம் பார்த்து, ஜோசியம் பார்த்து முடிவு செய்துள்ளார்கள். 

தேர்தல் ஆணையர் வேறு இல்லை, தமிழக முதல்வர் வேறு இல்லை. நடந்து முடிந்த சட்டமன்ற இடைத் தேர்தல்களில் அதிமுக பண பலத்தை வைத்து வெற்றி பெற்றுள்ளது. மத்தியில் ஆள்பவர்கள் இவர்களை கைவிட்டால் நிச்சயம் இந்த ஆட்சி நீடிக்காது என்றார். உள்ளாட்சி தேர்தல் குறித்து எதிர்க்கட்சிகள் நீதிமன்றத்தை நாடினால் அமமுகவும் வழக்கு தொடுக்கும் என்றார்.

இந்தியாவில் நடைபெறும் பாலியல் வன்கொடுமை தொடர்பான குற்றங்களை குறைக்க தெலங்கானா என்கவுன்ட்டர் போன்ற நடவடிக்கைகள் தேவையாக உள்ளது என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார்.