கூட்டணி விவகாரத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியை அலட்சியம் செய்யும் விதமாக தி.மு.க நடந்து கொள்வதாக தி.க தலைவர் வீரமணியை சந்தித்து புலம்பிவிட்டு வந்துள்ளார் திருமாவளவன்.

தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழகத்தில் தங்கள் தலைமையில் கூட்டணி உருவாகிவிட்டதாக செல்லும் இடம் எல்லாம் பேசுகிறார். ஆனால் காங்கிரஸ் – தி.மு.க கூட்டணி என்று தான் குறிப்பிடுகிறார். மதிமுகவையும் சரி, வி.சி.கவையும் சரி தோழமை கட்சிகள் என்று தான் தற்போது வரை ஸ்டாலின் தெரிவித்து வருகிறார். போதாக்குறைக்கு வைகோவும் சரி திருமாவும் சரி கூட்டணியில் இல்லை என்று தி.மு.க பொருளாளர் துரைமுருகன் வெளிப்படையாக கூறுகிறார். 

தேர்தல் இன்னும் ஒரு மாதத்தில் அறிவிப்பதற்கான சூழல் உள்ளது. இந்த நிலையில் தி.மு.க கூட்டணிக்கு தான் வெற்றி வாய்ப்பு என்று கருத்துக் கணிப்புகள் கூறுகின்றன. பா.ஜ.கவின் தீவிர ஆதரவு ஊடகங்கள் கூட தமிழகத்தில் தி.மு.கவிற்கு சாதகமான சூழல் நிலவுவதாகவே கூறி வருகின்றன. இதனால் தமிழகத்தில் தி.மு.க கூட்டணி தற்போது வெற்றிக்களிப்புடன் இருக்கிறது. ஆனால் கூட்டணியில் இடம் கிடைக்குமா? கிடைக்காதா? கிடைத்தாலும் எத்தனை தொகுதிகள் கிடைக்கும்? எந்தெந்த தொகுதிகள் கிடைக்கும் என்று வி.சி.கவும், மதிமுகவும் திக் திக் மனநிலையில் தான் உள்ளன.  

இந்நிலையில் தொகுதிப் பங்கீடு பேச்சு முடிந்து ஒப்பந்தம் கையெழுத்தாகும் வரை எந்த கட்சியுடனும் கூட்டணியை உறுதிப்படுத்த முடியாது என்று துரை முருகன் அண்மையில் பேசியுள்ளார். துரைமுருகனின் இந்த பேச்சு திருமாவளவனை மனதில் வைத்து தான் என்று கூறுகிறார்கள். ஏனென்றால் வி.சி.க – தி.மு.க இடையே கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெற்றாலும் சிதம்பரம் தொகுதி தனக்கு வேண்டும் என்று திருமா அடம் பிடிப்பது தான் சிக்கலுக்கு காரணம் என்கிறார்கள். கடலூர் தொகுதியை காங்கிரசுக்கு ஒதுக்க வேண்டிய கட்டாயத்தில் தி.மு.க உள்ளது. எனவே கடலூர் மாவட்டத்தில் உள்ள மற்றொரு தொகுதியான சிதம்பரத்தில் தி.மு.க வேட்பாளரை நிறுத்த விரும்புகிறது. 

விழுப்புரம் தொகுதியை திருமாவளவனுக்கு கொடுக்க ஸ்டாலின் விரும்புகிறார். ஆனால் விழுப்புரம் தொகுதியில் நின்றால் நிச்சயமாக பொன்முடி தன்னை தோற்கடித்துவிடுவார் என்று திருமா கருதுகிறார். இந்த நிலையில் தான் திடீரென திருமாவளன் திக தலைவர் வீரமணியை சந்தித்து பேசியுள்ளார். இந்த சந்திப்பே தி.மு.க கூட்டணியில் தனக்கான இடம்  உறுதியாகதது குறித்து திருமா பேச ஏற்பாடு செய்யப்பட்டது தான் என்கிறார்கள்.

 

கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது முதலில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு ஒரே ஒரு தொகுதியை மட்டும் தி.மு.க ஒதுக்கியது. இதனால் விசிக தொண்டர்கள் அதிருப்தி அடைந்தனர். இதனை தொடர்ந்து வீரமணி கலைஞரிடம் பேசி திருவள்ளூர் தொகுதியை பெற்றுக் கொடுத்தார். அதே பாணியில் தற்போதும் வீரமணியை சந்தித்து பேசினால் தனக்கு விடிவு கிடைக்கும் என்று கருதியே பெரியால் திடலுக்கு சென்றுள்ளார் திருமா.

ஆனால் தற்போது கலைஞர் தி.மு.க இல்லை, இப்போது இருப்பது ஸ்டாலின் தி.மு.க எனவே விட்டு தான் பிடிக்க வேண்டும். அவசரப்பட வேண்டாம் என்று வீரமணி கூறி அனுப்பியதாக கூறப்படுகிறது. அதே சமயம் பொது எதிரியான பா.ஜ.க வந்துவிடக்கூடாது. அதற்கு என்ன தியாகம் வேண்டுமானாலும் செய்யலாம் என்று இரண்டு நாட்களுக்கு முன்னர் வீரமணி பேசியிருந்தார். இதன் பின்னணியில் தி.மு.க மீதான திகவின் அதிருப்தி வெளிப்பட்டதாக கூறுகிறார்கள்.

அதாவது பா.ஜ.கவிற்கு எதிராக தி.மு.க தான் ஜெயிக்க வேண்டும் என்றெல்ல பா.ஜ.கவை யார் வேண்டுமானாலும் வீழ்த்தலாம் என்கிற ரீதியில் தான் வீரமணி பேசியதாகவும், அவர் மனதிலும் 3வது அணி என்கிற ஒரு யோசனை உள்ளதாகவும், அதற்கான முயற்சியில் அவர் ஈடுபடக்கூடும் என்றும் சொல்கிறார்கள்.