திமுக கூட்டணியில் முக்கிய கூட்டணிக் கட்சிகளுக்கு கூட உதய சூரியன் சின்னத்தில் தான் தொகுதி ஒதுக்கீடு என்று பேச்சு அடிபடும் நிலையில் அதற்கு முரணாக ஒருஅறிக்கையை வெளியிட்டுள்ளார் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி பொதுச் செயலாளர் ஈஸ்வரன்.

கடந்த தேர்தலில் அதிக தொகுதிகளில் திமுக வேட்பாளர்களை களத்தில் இறக்கியிருந்தால் தற்போது திமுக ஆட்சி தான் தமிழகத்தில் நடந்து கொண்டிருக்கும் என்று முழுமையாக நம்புகிறார் மு.க.ஸ்டாலின். கடந்த முறை காங்கிரசுக்கு 41 தொகுதிகளை ஒதுக்கியதே திமுக பெரும்பான்மை பெற முடியாமல் போனதற்கு காரணம் என்று ஸ்டாலின் நினைக்கிறார். அதே சமயம் 234 தொகுதிகளிலும் வேட்பாளர்களை இரட்டை இலை சின்னத்தில் நிறுத்தி குறைந்த அளவிலான பெரும்பான்மையுடன் ஜெயலலிதா மீண்டும் ஆட்சி அமைத்துவிட்டார்.

தற்போது வரும் சட்டப்பேரவை தேர்தலிலும் இதே பாணியில 234 தொகுதிகளிலும் உதய சூரியன் சின்னத்தில் வேட்பாளர்களை களம் இறக்குவது தான் திமுகவின் வியூகம் என்கிறார்கள். அந்த வகையில் திமுகவில் தற்போது காங்கிரஸ், மதிமுக, விடுதலைச்சிறுத்தைகள், கொங்கு நாடு மக்கள் தேசியக் கட்சி ஆகியவை இடம்பெற்றுள்ளன. இவைகள் தவிர வேறு சில சிறிய கட்சிகளும் திமுக கூட்டணியில் உள்ளன. இந்திய யூனியன் முஸ்லீம் லீக், பார்வேர்டு பிளாக், த.ம.மு.க உள்ளிட்ட கட்சிகளும் கூட திமுக கூட்டணியில் சட்டப்பேரவை தேர்தலை எதிர்கொள்ள வாய்ப்புள்ளது.

இந்த கட்சிகளில் காங்கிரசை தவிர வேறு எந்த கட்சிக்கும் நிரந்தர சின்னம் இல்லை. இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி கேரளாவில் அங்கிகரிக்கப்பட்ட கட்சி என்கிற அடிப்படையில் தமிழகத்தில் ஏணி சின்னத்தில் போட்டியிட முடியும். ஆனால் இந்த முறை காங்கிரசை தவிர மற்ற அனைத்து கூட்டணி கட்சிகளுக்கும் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டால் தான் தொகுதி என்பதில் திமுக உறுதியாக இருப்பதாக கூறுகிறார்கள். இந்த விஷயத்தில் முதலில் முரண்டு பிடித்த விசிக தற்போது உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட ஆயத்தமாகிவிட்டதாக கூறுகிறார்கள்.

இதே போல் வைகோவையும் சமாதானம் செய்யும் வேலையில் திமுக மேலிடம் ஈடுபட்டுள்ளது. கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியும் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் நாமக்கல் தொகுதியில் உதயசூரியன் சின்னத்தில் தான் போட்டியிட்டது. அந்த வகையில் அந்த கட்சிக்கு இந்த தேர்தலிலும் உதயசூரியன் சின்னத்தில் தான் தொகுதிகள் ஒதுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் கடந்த முறையே உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்பதால் தான் கொங்கு ஈஸ்வரன் தேர்தலில் போட்டியிடாமல் சின்ராஜூக்கு வாய்ப்பு கொடுத்து எம்பியாக்கினார்.

தற்போது கொங்கு ஈஸ்வரன் எம்எல்ஏ கனவில் இருக்கிறார். அவருக்கு திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் எம்எல்ஏ ஆக விருப்பம் இல்லை. எனவே இந்த முறை தனிச்சின்னத்தில் போட்டியிடுவதிலும் அவர் உறுதியாக இருப்பார் என்கிறார்கள். இதற்கிடையே காங்கிரசை தவிர வேறு கட்சிகளுக்கு திமுக கூட்டணியில் தனிச்சின்னம் இல்லை என்று தொடர்ந்து தகவல்கள் வெளியாகி வருகின்றன. இது ஈஸ்வரனை எரிச்சல் அடைய வைத்தாக கூறுகிறார்கள். மேலும் இது குறித்து திமுக தலைமையகத்தை தொடர்பு கொண்டு ஈஸ்வரன் பேசியதாகவும் சொல்லப்படுகிறது. அப்போது தனிச்சின்னம், திமுகவின் சின்னம் என்பதை பற்றியெல்லாம் தாங்கள் எந்த முடிவையும் எடுக்கவில்லை என்று திமுக தரப்பில் கூறியிருக்கிறார்கள்.

இதனை தொடர்ந்தே உளவுத்துறை, அது இது என்று கூறி ஈஸ்வரன் காட்டமாக அறிக்கையை வெளியிட்டதாக சொல்கிறார்கள். அதே சமயம் திமுக கூட்டணியில் தனிச்சின்னம் கிடைக்கவில்லை என்றால் கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி வேறு முடிவு எடுக்கும் என்றும் பேச்சு அடிபடுகிறது.