தமிழக சட்ட பேரவை தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டவுடன் அனைத்து அரசியல் கட்சிகளும் அவசரம் அவசரமாக கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சு வார்தையை தொடங்கின. 

சட்ட பேரவை தேர்தலில் அதிக இடங்களில் போட்டியிடும் திட்டத்தால் தொகுதி பங்கீட்டில் தி.மு.க பிடிவாதத்துடன் செயல்படுவதாக கூட்டணி கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன. இதனால் அதிருப்தி அடைந்துள்ள கூட்டணி கட்சிகள் அடுத்தகட்ட நகர்வுகள் குறித்து ஆலோசனையில் ஈடுபட்டுள்ளன. தமிழக சட்ட பேரவை தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டவுடன் அனைத்து அரசியல் கட்சிகளும் அவசரம் அவசரமாக கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சு வார்தையை தொடங்கின. அ.தி.மு.க முதலில் தனது கூட்டணி கட்சியான பா.ம.கவுடன் தொகுதி பங்கீட்டை முடித்து 23 தொகுதிகள் என்று முடிவு செய்தது. அதைத் தொடர்ந்து, தி.மு.கவும் தனது கூட்டணி கட்சிகளான ஐ.யு.எம்.எல் மற்றும் ம.ம.க ஆகிய கட்சிகளுக்கு 5 இடங்களை ஒதுக்கியது.

அதன் பின்னர், தி.மு.க காங்கிரஸுடன் இரண்டு கட்டங்களும், கம்யூனிஸ்ட், வி.சி.க மற்றும் ம.தி.மு.க கட்சிகளுடனும் தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தை நடத்தியது இந்த பேச்சு வார்த்தைகளில் எந்த முன்னேற்றமும் இல்லாமல் முட்டுக்கட்டை நீடிக்கிறது. இதற்கு தி.மு.கவின் பிடிவாதமே காரணம் என்று கூட்டணி கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன. அதிக இடங்களில் போட்டியிட வேண்டும் என்ற திட்டத்தில் தி.மு.க கூட்டணி கட்சிகள் கேட்கும் இடங்களை பாதியாக குறைத்து பேரம் பேசுவதாக காங்கிரஸ் நிர்வாகிகள் கூறுகின்றனர். கடலூரில் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரியும் “நண்பர்கள் மத்தியில் பேரம் என்பதே இருக்க கூடாது” என்று சூசகமாக தெரிவித்தார்.

தேசிய கட்சியின் அந்தஸ்துக்கு தகுந்த சீட்டுகள் ஒதுக்கப்பட வேண்டும் என்று தி.மு.கவிடம் காங்கிரஸ் தெரிவித்துள்ளது. கடந்த 15 ஆண்டுகளாக (2014 தவிர) தி.மு.க கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிக்கு தி.மு.க அளிக்கும் மரியாதை இவ்வளவுதானா என்று காங்கிரஸ் கட்சியினர் கொதிப்படைந்துள்ளனர். இதையடுத்து, அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து அவசர ஆலோசனை நடத்த காங்கிரஸ் கட்சி அதன் மாநில மற்றும் மாவட்ட தலைவர்களின் கூட்டத்தை கூட்டியுள்ளது. இக்கூட்டத்தில் கூட்டணியில் நீடிப்பது குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும் என்று காங்கிரஸ் நிர்வாகிகள் தெரிவித்தனர். 


மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இடையே நடைபெற்ற தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தையின் போதும் தி.மு.க பிடிவாதம் பிடித்ததால், மார்க்ஸிட் கம்யூனிஸ்ட் கட்சி பேச்சு வார்த்தையிலிருந்து திடீரென வெளியேறியது. இதையடுத்து அக்கட்சி செயற்குழு கூட்டத்தை கூட்டி தி.மு.கவின் நிலைப்பாடு குறித்து விவாதித்தது. இதேபோல், வி.சி.க மற்றும் ம.தி.மு.க கட்சிகளுடனும் நடைபெற்ற தொகுதி பங்கீடு பேச்சு வார்தைகளும் தோல்வியில் முடிந்துள்ளது. இதனால், தி.மு.க தனது கூட்டணி கட்சியினரிடம் “பெரியண்ணன் தோரணையில்” அனுகுவதாகவும், தொகுதி பங்கீட்டில் விட்டு கொடுத்து போகாமல் பிடிவாதம் பிடிப்பதாலும் கூட்டணி முறியும் நிலை ஏற்பட்டுள்ளதாக அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.