திமுக கூட்டணியில் சேர்ந்துவிட வேண்டும் என்பதில் வாசன் ஆர்வமாக இருக்கிறார். திமுக கூட்டணியில் ஏற்கனவே கூட்டணி கட்சிகள் நிறைந்துள்ள நிலையில், வாசனின் கனவு நனவகுமா என்ற கேள்வி எழுந்திருக்கிறது.

1996-ம் ஆண்டில் காங்கிரஸ் கட்சியிலிருந்து பிரிந்து வந்தவுடனேயே 40 சட்டப்பேரவைத் தொகுதி, 20 நாடாளுமன்றத் தொகுதிகளை மூப்பனார் தொடங்கிய தமாகாவுக்கு திமுக வாரி வழங்கியது எல்லாம் பழங்கதை. இன்றோ திமுக கூட்டணியில் இடம் பிடிக்க தவியாய் தவித்து வருகிறது தமாகா. 2014-ம் ஆண்டு மீண்டும் தொடங்கப்பட்ட தமாகா, 2016-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தொகுதியில் திமுகவுடன் கூட்டணி அமைக்க மிகவும் ஆசைப்பட்டது.

  

ஆனால், தமாகாவை கூட்டணியில் சேர்க்க காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்ததால், அந்த முயற்சி முன்னேறவில்லை. பிறகு அதிமுகவோடு கூட்டணி அமைக்க காத்திருந்த வாசனின் முயற்சி திருவினையாகவில்லை. வேறு வழியின்றி மக்கள் நலக் கூட்டணிக்கு சென்றது. வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பலமான கூட்டணியில் இணைந்து போட்டியிட வேண்டும் என்பதில் தமாகா உறுதியாக இருக்கிறது. ஆனால், அதிமுக - பாஜக கூட்டணியில் தமாகா என்று வரும் தகவல்களை அக்கட்சியினர் மறுக்கிறார்கள்.  

பாஜக இடம்பெறும் கூட்டணியில் தமாகா இடம் பெறாது என்கிறார்கள். 1999 நாடாளுமன்றத் தேர்தல், 2001 சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக இடம் பிடித்த திமுக கூட்டணியை மூப்பனார் ஏற்க மறுத்த விஷயங்களை தமாகவினர் நினைவுப்படுத்துகிறார்கள். எனவே இந்த முறை திமுக கூட்டணிக்கு செல்வதற்கான முயற்சிகளை வாசன் திரைமறைவில் மேற்கொண்டு வருகிறார் என்றும் அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.  

கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் தங்களைச் சேர்க்க காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்ததைப்போல, இந்த முறை காங்கிரஸ் எதிர்க்காது என்றும் தமாகாவினர் கூறுகிறார்கள். திமுக தலைமையுடன் வாசன் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாகக் கூறப்படும் நிலையில், ஸ்டாலினின் முடிவுக்காகவும் அக்கட்சி காத்திருக்கிறது.

ஆனால், திமுக கூட்டணியில் நிறைய கூட்டணி கட்சிகள் இருப்பதால், புதிய கூட்டணி கட்சிகளைச் சேர்க்க யோசித்து வருவதாகவும் தெரிகிறது. தற்போதைய நிலையில், திமுகவில் இடம்பெற எல்லா முயற்சிகளையும் வாசன் மேற்கொண்டு வருவதாகவே அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால், வாசனின் கனவு நனவாகுமா என்பது ஸ்டாலின் கையில்தான் உள்ளது.