அரசின் தோல்விதான் நோய் பரவலுக்கு காரணம் என்பதை ஒப்புக்கொண்ட பின்னால் சுகாதாரத்துறை அமைச்சருக்கும் அதில் பங்கு இருக்கிறது. அவரும் மாற்றப்படுவாரா என்று கொங்கு நாடு மக்கள் கட்சி பொதுச்செயலாளர் ஈஸ்வரன் தெரிவித்துள்ளார்.

 
தமிழக சுகாதர துறை செயலாளராக இருந்த பீலா ராஜேஷை, அந்தப் பொறுப்பிலிருந்து நீக்கிவிட்டு, ஏற்கனவே சுமார் 7 ஆண்டுகள் சுகாதர துறை செயலாளராக இருந்த ராதாகிருஷ்ணனை சுகாதார செயலாளராக தமிழக அரசு நியமித்துள்ளது. ஏற்கனவே சென்னை மாநகர கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரியாக செயல்பட்டுவரும் ராதாகிருஷ்ணனுக்கு மீண்டும் பழைய பதவி வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா வேகமாகப் பரவி வரும் நிலையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில் சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கரை மாற்றுவீர்களா என்று கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “தமிழகத்தில் கொரோனா நோய் தொற்று நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டு வருகிறது. நோய் தடுப்பு திட்டமிடலில் தமிழக அரசின் செயல்பாடுகள் போதாது என்று பலமுறை எல்லா தரப்பினரும் எச்சரித்தனர். ஆனால் இந்தியாவிலேயே தமிழக சுகாதாரத்துறைதான் சிறப்பாக செயல்படுகிறது என்று பேசியும், சுகாதாரத்துறை அமைச்சரும் செயலாளரும் இரவு பகல் பார்க்காமல் வெகு சிறப்பாக செயல்படுகிறார்கள் என்று சொல்லியும் தட்டிக்கழித்தனர்.

 
உலகத்திலேயே தமிழக சுகாதாரத்துறைதான் சிறப்பாக செயல்படுகிறது என்று பிரச்சாரமும் செய்தார்கள். கடந்த 3 மாதங்களாக சிறப்பாக செயல்பட்ட சுகாதாரத்துறை செயலாளர் திடீரென்று செயல்படவில்லையா? தினசரி அவர் ஊடகத்தை சந்தித்து என்ன சொல்கிறாரோ அதைதான் தமிழக மக்கள் வேதவாக்காக கேட்டார்கள். இன்றைக்கு கொரோனா நோய் தொற்று கட்டுப்படுத்த முடியாமல் அதிகமான பின்னால் சுகாதாரத்துறை செயலாளர் செயல்பாடுகள் சரி இல்லை என்று மாற்றியிருக்கிறார்கள். அமைச்சரோடு ஒத்துழைத்து அமைச்சர் சொல்வதை அப்படியே கேட்டு செயல்பட்டவர்தான் சுகாதாரத்துறை செயலாளர்.
அரசின் தோல்விதான் நோய் பரவலுக்கு காரணம் என்பதை ஒப்புக்கொண்ட பின்னால் சுகாதாரத்துறை அமைச்சருக்கும் அதில் பங்கு இருக்கிறது. அவரும் மாற்றப்படுவாரா? அரசாங்கத்தினுடைய அறிவிப்புகளில் வெளிப்படைத்தன்மை இல்லை என்பதை தமிழக மக்கள் முழுமையாக அறிந்திருக்கிறார்கள். இப்போதாவது ஒரு அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டி எல்லோருடைய கருத்துக்களையும் கேட்டு திட்டமிடலோடு செயல்படுங்கள். தவறவிட்டால் நோய் தொற்றினால் தடுமாறிக் கொண்டிருக்கிற தமிழகத்தை யாராலும் காப்பாற்ற முடியாது.” என்று அறிக்கையில் ஈஸ்வரன் தெரிவித்துள்ளார்.