திமுக கூட்டணி கட்சிகளின் ஊடகக் கண்காணிப்புக் குழுக் கூட்டம் இணைய வழியில் நடைபெற்றது, இக்கூட்டத்தில் திமுக, திக, காங்கிரஸ், சிபிஐ, சிபிஎம், மதிமுக, விசிக, இயூலீக், மமக, கொம்தேக ஆகிய கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர். 
இந்தக் கூட்டத்தில், “ஊடக விவாதங்களில் பா.ஜ.க சார்பில் பங்கேற்போர் தரம் தாழ்ந்த முறையில் கருத்துக்களைத் தெரிவிப்பதோடு, தனிநபர் தாக்குதலிலும் ஈடுபடுகின்றனர். அவர்களால் தமிழ்த் தொலைக்காட்சி ஊடக விவாதங்களின் தரம் சரிந்து கொண்டே போகிறது. எல்லா அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளையும் விவாதத்துக்கு அழைக்கவேண்டியது ஊடகங்களின் கடமை என்றாலும் தரம் தாழ்ந்த விமர்சனங்கள் தனிநபர் தாக்குதல்கள் முதலானவற்றைத் தடுக்க வேண்டியதும் அவர்களுடைய கடமையே ஆகும்.


மத்தியில் பாஜக ஆட்சி இருக்கின்ற காரணத்தினாலும், அவர்களுடைய அச்சுறுத்தலின் காரணமாகவும் ஊடக நிர்வாகத்தினர் இதில் நடுநிலையோடு செயல்பட முடியாத சூழல் இருக்கிறது. எனினும் இதை இப்படியே அனுமதிப்பது தமிழகத்தின் அரசியல் சூழலைப் பாழ்படுத்தி விடும் என்று அஞ்சுகிறோம். எனவே, பாஜக பிரதிநிதிகள் பங்கேற்கும் ஊடக விவாதங்களில் திமுக மற்றும் அதன் தோழமைக் கட்சிகளுடைய பிரதிநிதிகள் பங்கேற்பதில்லை என்று முடிவு செய்யப்படுகிறது.” என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.