காவிரி விவகாரத்தில் திமுக அனைத்து கட்சி கூட்டத்துக்கு அழைப்பு விடுத்தது. பல விமர்சனங்கள் , விவாதங்களுக்கு இடையே அனைத்து கட்சி கூட்டம் சற்றுமுன் அறிவாலயத்தில் துவங்கியது.

காவிரி, மேலாண்மை வாரியம் அமைக்கும் விவகாரத்தில் மத்திய அரசு, தமிழக விவசாயிகளுக்கு எதிராக நடந்து கொண்டது. இதனால், தமிழகத்தில் உள்ள விவசாய மக்கள் கொதிப்படைந்தனர். தமிழகம் முழுவதும் போராட்டங்கள், ரயில் மறியல் என நடந்தது. தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளும், விவசாய சங்கங்களும், போராட்டத்தில் குதித்தனர்.
இந்த நிலையில், திமுக சார்பில் கடந்த மாதம் சென்னையில், உண்ணாவிரதம் நடந்தது. இதில், திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். இந்த கூட்டத்தில், அனைத்து கட்சி கூட்டத்தை ஆளும் கட்சி கூட்டாததால் , திமுக சார்பில் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டுவேன். பிரதமரை அனைத்து கட்சி பிரநிதிகளுடன் சென்று சந்திப்பேன். தேவைப்பட்டால், குடியரசு தலைவரையும் சந்திப்பேன் என்று தெரிவித்திருந்தார்.

ஆனால், அவர் கூட்டிய அனைத்து கட்சி கூட்டத்திற்கு கடும் விமர்சனங்களும் எதிர்ப்புகளும் எழும்பியது. எந்த கட்சியும் ஆதரவு தரவில்லை. கூட்டணி கட்சியான, காங்கிரஸ் கூட கலந்து கொள்ளுமா? என்ற நிலை இருந்தது.
இதனால், அனைத்து கட்சி கூட்டத்தை மு.க.ஸ்டாலின் கைவிட்டு, அனைத்து விவசாயிகள் சங்கக் கூட்டமாக நடத்தினார். இந்த கூட்டத்தில் இடது சாரி கட்சிகளின் விவசாய சங்கங்கள் கலந்து கொண்டன. மக்கள் நலக் கூட்டணி தலைவர்கள் தனியாக குடியரசு தலைவரை சந்தித்து மனு அளித்தனர்.
இந்த நிலையில், 3 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. 3 தொகுதிகளிலும் திமுக, அதிமுக வேட்பாளர்களை அறிவித்தது. தேர்தல் நியாயமாக நடக்காது என்பதால் மக்கள் நலக் கூட்டணி கட்சிகள் தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்தன.
திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் திடீரென மீண்டும் அனைத்து கட்சி கூட்டத்தைக் கூட்டுவதாக அறிவித்து அதிமுக உட்பட அனைத்து தலைவர்களுக்கும் கடிதம் எழுதினார். இதனால், தமிழக அரசியலில் மீண்டும் ஒரு சர்ச்சை ஏற்பட்டது.
திமுக கூட்டும் அனைத்து கட்சி கூட்டம், தேர்தல் ஆதாயத்திற்காக கூட்டப்படுவது என்று கூறிய மக்கள் நலக் கூட்டணி, அதில் கலந்து கொள்வதில்லை என்று முடிவெடுத்தன.
ஆனால், திருமாவளவன் மட்டும் இதில் மாறுபட்ட நிலைப்பாடு எடுத்தார். இதனால், மக்கள் நலக் கூட்டணிக்குள் குழப்பம் ஏற்பட்டது. பின்னர் திருமா கலந்து கொள்ள இயலாது என கடைசி நேரத்தில் ஸ்டாலினுக்கு கடிதம் எழுதிவிட்டார்.
இந்த நிலையில், திமுக கூட்டும் அனைத்து கட்சி கூட்டத்தில் கலந்து கொள்வது பற்றி பாஜகவும் கடும் விமர்சனம் செய்திருந்தது. பாமக , தேமுதிக கண்டுகொள்ளவே இல்லை.
தமிழர்களுக்கு திமுகவும் காங்கிரசும் செய்த துரோகத்திற்கு மன்னிப்பு கேட்டால், பாஜக கலந்து கொள்ளும் என்று மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்திருந்தார். மறுபுறம் தமாகா தலைவர் ஜி.கே.வாசன், அனைத்து கட்சி கூட்டத்தில் கலந்து கொள்வதாக அறிவித்தார். காங்கிரஸ் கட்சியும் கலந்து கொள்வதாக அறிவித்தது.
இந்த நிலையில், சென்னை, அறிவலாயத்தில் அனைத்து கட்சி கூட்டம் இன்று காலை மு.க.ஸ்டாலின் தலைமையில் துவங்கியது. இந்த கூட்டத்தில், திமுக தவிர, திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சி சார்பில் அதன் தலைவர் திருநாவுக்கரசர், சட்டமன்ற காங். தலைவர் கே.ஆர்.ராமசாமி, விவசாய அணி தலைவர் பவன்குமார், தமாக சார்பில் ஜி.கே.வாசன், ஞானதேசிகன், கூட்டணி கட்சியான முஸ்லிம் லீக் சார்பில் காதர் மொய்தீன், திராவிடர் கழகம் சார்பில் கி.வீரமணி, எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் தேஹலான் பாகவி, மனிதநேய மக்கள் கட்சி சார்பில் ஜவாஹிருல்லா, கொங்குநாடு மக்கள் கட்சி தலைவர் ஈஸ்வரன், அனைத்து விவசயிகள் சங்கம் சார்பில் பி.ஆர்.பாண்டியன், கரும்பு விவசாயிகள் சங்க தலைவர்கள், தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்க நிர்வாகிகள் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் பாமக, தேமுதிக, பாஜக, நாம் தமிழர் கட்சி, மக்கள் நலக் கூட்டணி உள்ளிட்ட பிரதான கட்சிகள் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. கூட்டம் துவங்கியவுடன், திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் வரவேற்புரை ஆற்றினார்.
