கழகத்தின் மீதுள்ள பொறாமையில் சில்லுண்டுத் தனமாக சிரிப்பதும் சித்தரித்து கேலி பேசுவதும் , குரைப்பதுமாக இருக்கின்றார்கள். அந்த சிரிப்பொலிக்கும் குரைப்பொலிக்கும் தொடர்ந்து பதில் அளிக்க வேண்டிய அவசியமில்லை என கே.எஸ்.ராதாகிருஷ்ணன் காட்டமாக கூறியுள்ளார்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஐ.நா. மனித உரிமை அவையில் பேச அழைக்கப்பட்டிருக்கிறார் என்ற செய்திகள் ஊடகங்களில் வந்ததும், ஐநா சபையில் பேச மு.க.ஸ்டாலின் அழைக்கப்பட்டாரா? திமுகவின் வெட்கம் கெட்ட விளம்பரம்! பொய்யான கட்டுக்கதைகளை கட்டமைத்து, தமிழர்களை நம்பவைத்து ஏமாற்றுவது திமுகவுக்கு கைவந்த கலை. இப்படித்தான் காலம் காலமாக பொய்யான பிம்பங்களை பொய்ச்செய்திகள் மூலம் உருவாக்கி ஏமாற்றினார்கள் என பசுமைத் தாயகம் பொதுச் செயலாளர் அருள் கடுமையான மறுப்பு தெரிவித்து பக்கம் பக்கமாக விளக்கங்களையும் வெளியிட்டார்.

இந்நிலையில் அதற்கு மறுப்பு கூறும் விதமாய் திமுக செய்தித் தொடர்பாளரும் வழக்கறிஞருமான கே.எஸ்.ராதாகிருஷ்ணன் நீண்ட தொரு விளக்கத்தை தெரிவித்துள்ளார். இவர் ஏற்கனவே ஸ்டாலினோடு ஐ.நா.வுக்கு சென்று வந்தவர்.

இதுகுறித்து கே.எஸ்.ஆரின் விளக்கத்தில்; ஈழத்தமிழர் குறித்து பேச திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஐநா மனித உரிமை ஆணையத்தில் செல்லாம் என்ற செய்தியை கேட்டாலும் கேட்டார்கள் உடனே கொதித்தெழுந்து விட்டனர் குலக்கொழுந்துகள்.

பழையனவற்றை மறந்து பேசுகின்றனர். அன்புமணி கூட இப்படி பதிவு செய்து வைத்திருக்கும் ஒரு அமைப்பான பசுமை தாயகம் முயன்று ஐநா மனித உரிமை ஆணைய கூட்டத்தில் தான் பேசினார். அப்போது என்ன செய்தி வெளியிட்டனர் என்பதை அவர்களின் சிந்தனைக்கே விட்டுவிடுகின்றேன். அதை தவறு என அப்போதும் சரி, இப்பொழுதும் சரி நான் திரித்து பேசவில்லை.

ஐ நா மனித உரிமை ஆணையத்தில் பதிவு செய்த இந்த அமைப்புகள் மூலம்தான் ஐ நா மனித உரிமை ஆணையத்தில் பேச நேரமும் வழங்கும். ஐநா மனித உரிமை ஆணையத்தின் மன்றத்தின் அரங்கங்கத்திலதான் நடத்தப்படும். இதில் பிரதான மத்திய அரங்கில் (main central hall)கழகத் தலைவர் பேச ஏற்பாடு நடந்துள்ளது. ஐநா மனித உரிமை ஆணையத்தின் அதிகாரிகள் கலந்துக் கொண்டு அதனை ஐ நா ஆண்டறிக்கையில் பதிவு செய்வார்கள்.

கழகத்தின் மீதுள்ள பொறாமையில் சில்லுண்டுத் தனமாக சிரிப்பதும் சித்தரித்து கேலி பேசுவதும் , குரைப்பதுமாக இருக்கின்றார்கள். அந்த சிரிப்பொலிக்கும் குரைப்பொலிக்கும் தொடர்ந்து பதில் அளிக்க வேண்டிய அவசியமில்லை என கருதுகின்றேன். ஆனாலும் சிலவற்றை சொல்லித்தான் தீர வேண்டும்”

“பசுமைத் தாயகம் என்பது பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பு அமைப்பு என்று அனைவருக்கும் தெரியும். அந்த அமைப்பின் பெயரால் தான் டாக்டர். அன்புமணி ஐ.நா. மனித உரிமை ஆணையத்தின் கூட்டத் தொடருக்கு கலந்துகொள்ள சென்றார்.

ஆனால், கழகத் தலைவர் மற்றும் எங்களைப் போன்றவர்களுக்கோ அப்படியான அமைப்பு எங்களுக்கு இல்லை. ஈழத்தமிழர்கள் விரும்பி,அவர்களின் முயற்சியால் தான் எங்களுக்கு அழைப்பிதழ்கள் வந்தது. இந்நிலையில் இந்த கூப்பாடு என்பது ஈழத்தமிழர்களின் உண்மையான பிரச்சனைக்கே குந்தகம் விளைவிக்கும் கூப்பாடாக தான் இருக்குமேயொழிய ஒட்டுமொத்த ஈழத்தமிழர்களின் பிரச்சனையின் பலத்தினை இவர்கள் கூப்பாட்டால் பலமும், வீரியமான வீச்சும் சேதாரம் தானே படும்.

இதே போல் 2017ம் ஆண்டு அழைப்பினை கிடைக்கப்பெற்று கழகத்தலைவர் ஸ்டாலின், டி.ஆர்.பாலு அவர்களும் நானும் ஐநா மனித உரிமை ஆணையத்தின் கூட்டத்தொடரில் கலந்துக் கொள்வதாக ஏற்பாடுகள் செய்யப்பட்டு சட்டமன்ற கூட்ட தொடர் பணி,தலைவர் கலைஞர் உடல் நிலை காரணமாக கலந்துக் கொள்ள இயலாமல் போனது. அன்றும் இதே குரைப்பொலி கேட்டது அன்று நான் சிரித்துக் கொண்டே கடந்து போனேன்.

ஐநா மன்றத்தின் எந்த அவையாக இருந்தாலும் ஈழத்தமிழர் நலனுக்காக குரல் ஒலிக்க வேண்டும் என்பது நம் அக்கறை. 34 அல்லது 35வது கூட்டத் தொடரில் பேசினேன் என்கின்றார்கள் அதன் தொடர்ச்சியாக, அதே வரிசையில் 42வது கூட்டத் தொடருக்கான எங்களுக்கு வந்த அழைப்பு என்பது மட்டும் எப்படி பொய்யாக இருக்க முடியும் என்பதை அவர்கள் தான் விளக்க வேண்டும்மதிமுக பொதுச் செயலாளர் வைகோவும் இதே எங்களுக்கு வந்த அழைப்பு போல அழைக்கப்பட்டு மூன்று முறைகலந்துக் கொண்டு சிறப்பித்தார்.

“ஐ.நா. மனித உரிமை ஆணையத்தின் இலச்சினை பொறிக்கப்பட்ட கடிதத்தில் அழைக்கப்பட்ட அரசியல் கட்சித் தலைவர்களின் பெயர்கள் இடம் பெற்றிருக்கும். ‘ தாங்கள் இந்தக் கூட்டத் தொடரில் பங்கேற்க தங்களுடைய பெயரைப் பதிவு செய்துள்ளோம் ’- என்று அழைப்பிதழில் கூறுவது ஐ.நா.மனித உரிமை ஆணையத்தில் கடைப்பிடிக்கப்படும் நடைமுறை மரபு.

ஐ.நா.மனித உரிமை ஆணையத்தின் அம்மாதிரியான கடிதம் தி.மு.கழகத் தலைவர் அவர்களுக்கும், எனக்கும் அனுப்பட்டுள்ளது. ஈழத்தமிழ் சகோதரர்கள் முன்வந்து அனுப்பி வைத்த கடிதம் தான் இது.

கழகத் தலைவரோ,கழகத் தலைமையோ இந்தக் கடிதம் பெற எந்தக் கோரிக்கையையும் வைக்கவில்லை. போஸ்கோ,பாலா, ரவி போன்ற புலம் பெயர்ந்த ஈழ நண்பர்கள் மனித உரிமை ஆணையத்தில் கழகத் தலைவர் கலந்து கொள்ள வேண்டும் என்று கடந்த ஐந்தாறு ஆண்டுகளாக கோரிக்கை வைத்துக் கொண்டிருந்தார்கள். அதன்படி 2017 ல் கழகத் தலைவருக்கு இதே மாதிரியான அழைப்பிதழை அனுப்பியதும் உண்டு.

ஐ.நா.மனித உரிமைக் கூட்டத்தில் பங்கேற்பவர்களுடைய பெயர்கள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன என்று தான் ஐ.நா.மனித உரிமை ஆணையம் எல்லோருக்கும் கடிதம் வழங்கியுள்ளது. அந்த வகையில் கழகத் தலைவர் ஸ்டாலினை மனித உரிமை ஆணையக் கூட்டத்தில் பங்கேற்குமாறு அழைப்புவிடுத்தது ஈழச் சகோதர்களே, அவரகளின் விருப்பத்தின் படி ஐ.நா.மனித உரிமை ஆணையத்தில் பெற்று அனுப்பிய கடிதம் தான் இது. இதை மற்றவர்களுடைய புரிதலுக்காகப் பதிவு செய்கிறேன்”.

”நாங்கள் இதுபோன்ற அழைப்புகளை எதிர்பார்த்து கேட்கவில்லை. ஈழத்து சகோதரர்கள் தான் நீங்கள் வந்தால் நல்லது என்றதால் அதை ஏற்றுக் கொண்டோம். திரும்ப திரும்ப ஒரு பொய்யை சொன்னாலும் அது யதார்த்தமாகாது. சற்று புரிதலும் சிந்தனையும் இருந்தால் இப்படி அபத்தமாக தேவையில்லாமல் சில ஆஷாடபூதிகள் பேசுவதை அலட்சியப்படுத்தி நகர்வோம்.

உலகின் எந்த பகுதியில் மனித உரிமை பாதிக்கப்பட்டாலும்,ஏன் சுற்றுச் சூழல் பாதிக்கப்பட்டாலும் கூடத் தீர்வை எட்ட ஐ.நா.மனித உரிமை ஆணையத்திடம் முறையிடலாம். கிட்டத் தட்ட எட்டு ஆண்டுகளுக்கும் மேலாக ஈழத்தமிழர் பிரச்சினை அங்கு நிலுவையில் உள்ளது. ஈழத்தமிழர்களுக்கான நீதி கிடைக்க வாய்ப்புக் கிடைக்காமல் தள்ளிப் போய்க்கொண்டே இருக்கிறது.

இலங்கையில் ராஜபக்சே ஆட்சி வரை .அதாவது 2009 இறுதிப்போர் வரை நடந்த இனப்படுகொலைகளையும், மனித உரிமை மீறல்களையும் விசாரிக்க சர்வதேச சுதந்திரமான விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கை தொடர்ந்து எழுப்பப்பட்டும், இலங்கை அரசால் இந்த ஆணையத்தில் இந்தப் பிரச்சினைக்கு நியாயமாக தீர்வு எட்டாமல் போய்க் கொண்டே இருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் மார்ச்- செப்டம்பரில் நடக்கும் ஐ.நா.மனித உரிமை ஆணையத்தின் 42 ஆவது கூட்டத் தொடர் வரும் செப்டம்பர் 9 ஆம் தேதியன்று- ஜெனீவாவில் துவங்க இருக்கிறது.

ஐ.நாவின் 35வது கூட்டத் தொடருக்கும் 2014இல் அழைப்பு வந்தது. கடந்த 40வது கூட்டத்தொடருக்கும் அழைப்பு வந்தது. கடந்த முறை ( 2017) கிடைக்கப்பெற்ற அழைப்பானையையும் , ஐ.நா நுழைவு அட்டை, ஐ.நா ஆண்டறிக்கையில் எனது பெயரிட்ட அறிக்கை நகலையும் ஆதாரமாக இத்துடன் இணைத்துள்ளேன். இவ்வளவு ஆதாரங்களையும் வைத்துக் கொண்டு இவர்களுக்கு பதில் சொல்லி நேரம் செலவிடும் போது தலையெழுத்து" என சிந்திக்காமல் இருக்க முடியவில்லை என்று தெரிவித்துள்ளார்.