நீட் தேர்வில் தமிழகத்திற்கு மத்திய மாநில அரசுகள் செய்த துரோகத்தை மக்களும் மாணவர்களும் மறக்கமாட்டார்கள் எனவும், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அரசியல் துறவறம் மேற்கொள்ள வேண்டும் எனவும் திமுக செயல்தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். 

நாடு முழுவதும் மருத்துவப் படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கை தேசிய அளவில் 'நீட்' பொது நுழைவு தகுதி தேர்வின் அடிப்படையில் நடத்தப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதையடுத்து ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், அஸாமி, வங்காளம், குஜராத்தி, மராத்தி, ஒடியா ஆகிய 10 மொழிகளில் தேர்வு நடைபெற்றது.

இந்நிலையில், நீட் தேர்வில் ஒரே மாதிரியான கேள்விகள் கேட்கப்படவில்லை என்று  நீதிமன்றங்களில் வழக்கு தொடரப்பட்டது. 

இதனிடையே தமிழகத்திற்கு விலக்கு வேண்டும் என தமிழக அரசு மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்தி வந்தது. அதற்கு 3 மத்திய அமைச்சகங்கள் ஒப்புதல் அளித்த நிலையில் நீட் தேர்வின் அடிப்படையிலேயே மாணவர்சேர்க்கை நடைபெற வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

இதையடுத்து நாளை மறுநாள் மருத்துவ கலந்தாய்வு நடைபெறும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. 
இந்நிலையில் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள ஸ்டாலின், நீட் தேர்வில் தமிழகத்திற்கு மத்திய மாநில அரசுகள் செய்த துரோகத்தை மக்களும் மாணவர்களும் மறக்கமாட்டார்கள் எனவும், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அரசியல் துறவறம் மேற்கொள்ள வேண்டும் எனவும்  வலியுறுத்தியுள்ளார். 

நீட் தேர்வில் இருந்து குதிரை பேர அரசால் விலக்கு பெற முடியவில்லை எனவும், நீட் தேர்வால் மாணவர்களின் மருத்துவ கனவு கலைந்து விட்டது எனவும் தெரிவித்தார்.