DMK Active Chief Stalin Explain about Edappadi palanisamy Rule

பெற்ற மகன் எதிர்கட்சியில் இருந்தாலும் அவனை எதிரியாக பார்ப்பதுதான் தமிழக அரசியலின் நெடுநாள் வாடிக்கை. ஆனால் இந்த குணம் வட இந்திய அரசியலில் கிடையாது. காலையில் ராகுலுக்கு எதிராக மிக கடுமையான ஒரு புதிய குற்றச்சாட்டை பதிவு செய்து ‘ஊழல் சாம்ராஜ்ஜியத்தின் இளவரசன்’ என்று நக்கலும் அடித்துவிட்டு, அதே நாள் மாலையில் செங்கோட்டை லாபியில் அதே ராகுலோடு தேநீர் அருந்துவார் மோடி. இதே பாலிடிக்ஸை ராகுலும் திருப்பிச் செய்வார். வட இந்தியாவில் இந்த அரசியல் நாகரிகம் மிக இயல்பாக போற்றப்படுவது வழக்கம். 

ஆனால் ஜெயலலிதா இப்படி கைகுலுக்கி கொள்வதை மிக கடுமையாக எதிர்த்தார். கருணாநிதி அதை எதிர்க்கவில்லை என்றாலும் பெரிதாக ஆதரிக்கவுமில்லை. ஆனால் அடுத்த தலைமுறை அரசியல் தலைவர்களில் இந்த நாகரிகத்தை வரவேற்ற பெருமை ஸ்டாலினைதான் சேரும். உரிய மரியாதை தரப்படாது என்று தெரிந்தும் ஜெயலலிதாவின் பதவியேற்பில் பங்கேற்றது, அவரை அப்பல்லோவில் காண சென்றது, அவரது பூத உடலுக்கு அஞ்சலி செலுத்தியது என்று ஆரம்பித்து இதோ ஹெச்.ராஜாவின் மணிவிழாவுக்கு சென்று வாழ்த்தியது வரை ஸ்டாலினின் அரசியல் அப்ரோச்மெண்ட் இஸ் ஆஸம்!

ஆனால் அப்பேற்ப்பட்ட ஸ்டாலின் நேற்று ஊட்டியில் நடந்த பொதுக்கூட்டத்தில் ஏதோ ஆத்திரத்தின் உச்சிக்கே சென்று அ.தி.மு.க.வினரை தாறுமாறாக விமர்சித்து தள்ளிவிட்டார். அதிலும் அவர் வாயில் நேற்று சூயிங்கமாக சிக்கி சின்னாபின்னமானது முதல்வர் எடப்பாடிதான். 
ஓ.பி.எஸ். மற்றும் இ.பி.எஸ். இருவருக்கும் எதிராக ஸ்டாலின் எடுத்து வைத்த விமர்சனங்களில் சில...

”பாரதிராஜாவோட முதல் மரியாதை படத்துல வர்ற நடிகர் மாதிரி ‘எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும்’ அப்படின்னு நாமெல்லாம் கேட்டுக்கிட்டே இருக்கோம். ஆனா ஜெயலலிதா அம்மையாரோட மரண மர்மத்துக்கு விளக்கம் சொல்ல மாட்டேங்கிறாங்க. கவர்னரும் அன்னைக்கு தான் போயி அவங்களை பார்த்துட்டு வந்த மாதிரிதான் பேசுனாரு. ஆனா இப்போ திண்டுக்கல் சீனிவாசனோ கவர்னரும் பார்க்கலைன்னு சொல்றார். அப்போ கவர்னரும் அன்னைக்கு பொய் சொன்னார? கவர்னர் ஜெயலலிதாவை பார்த்தது உண்மைதான்னா, திண்டுக்கல் சீனிவாசன் பேச்சுக்கு மறுப்பு தெரிவிச்சு அறிக்கை வெளியிட்டிருக்க வேண்டிதானே?

ஜெயலலிதாவின் உடல் நிலையோட கண்டிஷன் மோடிக்கு நல்லாவே தெரியும். அதனாலதான் அந்தம்மாவை பார்க்க வரவேயில்லை. இறந்த பிறகு வந்துட்டு பறந்துட்டாரு. 

அவ்வளவு பெரிய பாதுகாப்பு வளையத்துல இருந்த ஜெயலலிதாவுக்கு உடல் நிலை சரியில்லாம போனப்ப அவங்க வீட்டுல இருந்த ஆம்புலன்ஸுல ஏன் அப்பல்லோவுக்கு கொண்டு போகல? அந்த ஆம்புலன்ஸ் எங்கே இருந்துச்சு? இந்த மர்மத்துக்கெல்லாம் விடை தேடித்தான் சி.பி.ஐ. விசாரணை கேட்கிறோம்.” என்றவர் 

பின் பன்னீரையும், பழனியையும் விளாச துவங்கினார்...
“நடக்கும் இந்த வக்கற்ற வகையற்ற ஆட்சிக்கு மக்கள் நலனை பத்தி எந்த அக்கறையுமில்ல. முதலமைச்சர் பதவி பறிபோனதும் ‘தர்ம யுத்தம்’ துவக்கி நாடகம் போட்டார் பன்னீர் செல்வம். இவரும் இந்த வசூல்ராஜா எம்.பி.பி.எஸ்ஸான டாக்டர் விஜயபாஸ்கரும் மாறி மாறி கேவலமா திட்டிக்கிட்டாங்க. ‘ஜெயலலிதாவின் மரணம் பற்றிய விசாரணை நடந்தால் முதல்ல உள்ளே போவது பன்னீர்தான்.’ அப்படின்னு அமைச்சர் விஜயபாஸ்கர் சொல்ல, பன்னீரோ ‘அக்யூஸ்ட் நம்பர் 1’ அப்படின்னு திருப்பி தாக்கினார். இப்படி தெருச்சண்டை போட்டுக்கிட்ட ரெண்டு பேரும் இன்னைக்கு ஒரே ஆட்சியில கழுத்தைக்கட்டிட்டு உட்கார்ந்திருக்காங்க. காரணம் கொள்ளையடிக்கணும், சுருட்டணும் அப்படிங்கிற ஒரே காரணத்துக்காகதான். 

சசிகலாவை கட்சியை விட்டே துறத்துற முடிவுல இருக்கிறார் எடப்பாடி. ஆனா அதே சசிகலா காலில் விழுந்து இவர் எழுந்த மானங்கெட்ட காட்சியை பார்த்தீங்கதானே மக்களே?!

இப்படி கேவலமா முதல்வர் பதவிக்கு வந்த நீ என்னை பார்த்து ‘ஸ்டாலினுக்கு என்ன தகுதி இருக்குது?’ அப்படின்னு கேட்டிருக்க. என் தகுதியை பற்றி பேசுறதுக்கு முதல்ல உனக்கு தகுதியிருக்குதா?! பெரும்பான்மை இல்லாம ஆட்சியை ஓட்டிக்கிட்டிருக்கிற நீயெல்லாம் என்னை பார்த்து பேசலாமா? எடப்பாடியோட சகலைதான் கோட்டையில உட்கார்ந்து பேரம் பேசிட்டிருக்கார். இப்படிப்பட்ட லட்சணத்தை வெச்சிருக்கிற நீ என் தகுதி பற்றி பேசலாமா? மோடி அரசிடம் மண்டியிட்டு கிடக்குற நீ ‘மத்திய அரசோடு இணைந்து செயல்படுறோம்’ அப்படின்னு சொல்லி மழுப்புற. இணைந்து செயல்பட்டுகிட்டிருந்தேன்னா வர்தா புயல் நிவாரணத்துக்கு நீ கேட்ட தொகை கிடைச்சுதா? நீட் விவகாரத்துல தமிழகம் கேட்ட விலக்கு கிடைச்சுதா? இதையெல்லாம் சாதித்துக் காட்டாத சூடு சொரணையில்லாத அரசு இது. நீ என்னோட தகுதிபற்றி பேசலாமா?

மக்களோட வரிப்பணத்துல நடத்தப்படுற எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா மேடையை பொறுப்பான எதிர்க்கட்சியான தி.மு.க.வை திட்ட பயன்படுத்துறீயே, இந்த பணம் என்ன உன் அப்பன் வீட்டு பணமா? மக்கள் உங்க ஆட்சி எப்போ கலையும், கவிழுமுன்னு காத்திட்டிருக்காங்க.

‘மானங்கெட்ட பசங்களா எப்ப பதவி விலகுவீங்க?’ன்னு கேட்கிறாங்க. 
எடப்பாடி தான் விலக்கி வெச்சதா அறிவிச்சிருக்கிற 18 பேரையும் இணைச்சுகிட்டு சட்டமன்றத்தை நடத்தட்டும். அப்போ ஒத்துக்குறேன் எடப்பாடி ஒரு உண்மையான ஆண் மகன் அப்படின்னு.” என்று வெடித்து நிறுத்தியபோது அதிர்ந்து அமர்ந்திருந்தனராம் கட்சி நிர்வாகிகள். சிலருக்கு பதற்றமே வந்துவிட்டதாம்.