தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கிவருகிறது. இன்னும் 4 மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ளதால், அரசியல் கட்சிகள் அதற்கான பணிகளில் தீவிரம் காட்டத் தொடங்கியுள்ளன. அதிமுக கூட்டணியில் உள்ள தேமுதிக தனது நிலைப்பாடு குறித்து ஜனவரியில் அறிவிக்கும் என்று அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா ஏற்கனவே தெரிவித்திருந்தார். எனவே, தேமுதிக, அதிமுக கூட்டணியிலேயே நீடிக்குமா அல்லது கூட்டணியை மாற்றுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.


இந்நிலையில், தமிழகத்தில் 234 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் போட்டியிட நாங்கள் தயாராக உள்ளோம் என பிரேமலதா கூறினார். தேமுதிகவின் இந்த அறிவிப்பு அதிமுக கூட்டணியில் தேமுதிக இடம் பெறுமா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் தேமுதிக மாவட்டச் செயலாளர்களுடன் அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் நாளை மறுதினம் (டிசம்பர் 13) ஆலோசனை நடத்த உள்ளார். அந்தக் கூட்டத்தில் தேமுதிக தனித்து போட்டியிடுவதா அல்லது கூட்டணியில் இடம் பெற்று தேர்தலைச் சந்திப்பதா என்பது குறித்து ஆலோசிக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.