திமுக தயவினால்தான் நான் எம்.பி.யாக தேர்வு செய்யபட்டேன். இனத்தை அழித்த பாவி காங்கிரஸ் தயவில் இல்லை என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஆவேசமாக கூறியுள்ளார். 

சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த வைகோ, திமுக எம்.எல்.ஏக்களும், திமுக தலைவர் ஸ்டாலினும் சேர்ந்து என்னை மாநிலங்களவைக்கு அனுப்பியுள்ளனர். காங்கிரஸ் தயவினால் என்றும் நான் எம்.எல்.ஏ.வாகவோ அல்லது எம்.பி.யாகவோ தேர்வு செய்யப்படவில்லை. ஏற்கனவே 3 முறை மாநிலங்களவை எம்.பி. ஆனதும் கருணாநிதி தயவால்தான். காங்கிரசார் என்னை கோபப்பட்டு திட்டுவதாக இருந்தால், வேறு எதாவது சொல்லி திட்டிக்கொள்ளுங்கள். ஆனால் உங்களின் தயவால் சென்றேன் எனக் கூறாதீர்கள். 

அமித்ஷா கூறிதான் மாநிலங்களவையில் நீங்கள் காங்கிரஸை விமர்சித்தீர்களா என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த வைகோ அற்ப புத்தி உள்ளவர்களுக்கு பதில் கூற எனக்கு அவசியமில்லை என்றார். பிரதமர் மோடியை நேருக்கு நேர் பார்த்து தவறை சுட்டிக்காட்டும் தைரியம் உள்ளவன் நான். ஹைட்ரோ கார்பன், நியூட்ரினோ உள்ளிட்ட திட்டங்களுக்கு எதிராக மோடியிடம் பேசினேன். 

காங்கிரஸ் கட்சியினர் 12 பேர் நாடாளுமன்றத்தில் ஓட்டுப் போடாமல் ஓடிவிட்டார்களே. அவர்கள் என்ன மத்திய அரசிடம் பணம் வாங்கிவிட்டார்களா? நான் மோடியிடம் பேசியபோது, சீனாவிலிருந்து வரும் ஆடைகள் குறித்து பேசினேன். தமிழக ஆடை தயாரிப்பாளர்களுக்காக பேசினேன். மோடியிடமே சென்று அவரது தவறை சுட்டிக்காட்டியவன் நான். ஆனால் இலங்கை தமிழர்களை படுகொலை செய்த பாவிகள் இந்த காங்கிரசார். அவர்களுக்கு மன்னிப்பே கிடையாது என்று ஆவேசமாக சென்றுவிட்டார்.