உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்படுவதற்கு முன்னதாகவே இடப்பங்கீடு விவகாரத்தை முடித்துவிட வேண்டும் என்பதில் அதிமுக தீவிரம் காட்டி வருகிறது. பாமகவுடன் பேச ஒரு டீம், தேமுதிகவுடன் பேச ஒரு டீம் என இரண்டு டீம் இரவு பகலாக இரண்டு கட்சிகளுடனும் பேசி வருகிறது. ஆனால் இரண்டு கட்சிகளும் முன் வைக்கும் கோரிக்கைகளால் எந்த முடிவிற்கு வர முடியாத நிலையில் அதிமுக தலைமை உள்ளது.

உள்ளாட்சித் தேர்தலை பொறுத்தவரை மேயர் பதவி இடங்கள் அனைத்தையும் அப்படியே தட்டித் தூக்க வேண்டும் என்பது தான் அதிமுகவின் முதல் டார்கெட். எத்தனை மேயர், எத்தனை நகர்மன்ற தலைவர், எத்தனை பேரூராட்சி தலைவர் என்பதன் அடிப்படையில் தான் உள்ளாட்சித் தேர்தலில் எந்த கட்சி வென்றது என்பதை தீர்மானிப்பார்கள். அதுவும் மேயர் பதவிகளை அதிகம் பெறும் கட்சிதான் உள்ளாட்சி தேர்தலில் வென்ற கட்சியாக கருதப்படும். எனவே மேயர் பதவிகளை பொறுத்தவரை முடிந்த அளவிற்கு அத்தனையிலும் தாங்களே போட்டியிட்டால் சரியாக இருக்கும் என்று அதிமுக கருதுகிறது.

ஆனால் பாஜக, பாமக, தேமுதிக ஆகிய கட்சிகள் தலா 2 மேயர் பதவிகளை கேட்டு நெருக்கடி கொடுக்கின்றனர். இப்படி அந்த மூன்று கட்சிகளுக்கும் தலா இரண்டு என ஆறை ஒதுக்கினால் அதிமுக போட்டியிட போதுமான மேயர் பதவி இருக்காது. ஆனாலும் கூட தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இதனிடையே தேமுதிக தரப்பு தங்களுக்கு இரண்டு மேயர் பதவிகள் தேவை என்றிலும் அதிலும் மதுரையை தயவு செய்து தங்களுக்கு கொடுத்துவிடுங்கள் என்று கேட்டுக் கொண்டிருக்கிறார்களாம்.