தமிழக சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் போட்டியிட தயாராக உள்ளதாக தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கருத்து தெரிவித்திருப்பது அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  நடிகர் ரஜினி காந்த், அரசியல் கட்சி தொடங்க உள்ளதாகவும், தனித்தே 234 தொகுதிகளில் போட்டியிடப் போவதாகவும் அறிவித்துள்ள நிலையில், தேமுதிகவும் இந்த முடிவு எடுத்திருப்பதாக கூறப்படுகிறது. தேமுதிக பொருளாளர் பிரேமலதாவின் இந்த அறிவிப்பு அக்கட்சி தொண்டர்கள் மத்தியில் உற்சாகத்தையும், அதேநேரத்தில் குழப்பத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கிவரும் நிலையில் தமிழக அரசியல் கட்சிகள் தேர்தலை சந்திப்பதற்காக வியூகங்களை வகுத்து வருகின்றன. எந்த கட்சியுடன் கூட்டணி வைப்பது என்பது குறித்தும் அதற்கான காய்நகர்த்தல் வேலைகளிலும் அக்கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. வழக்கம்போல அதிமுகவுக்கும் திமுகவுக்குமே நேரடி போட்டி இருக்கும் என கூறப்பட்டு வந்த நிலையில், திடீரென நடிகர் ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்கப் போவதாக அறிவித்துள்ளார். இதனால் நிச்சயம் தேர்தலில் மும்முனைப் போட்டி உருவாக வாய்ப்பு இருப்பதாக கணிக்கப்படுகிறது. அதேநேரத்தில் தனது திரையுலக செல்வாக்கை பயன்படுத்தி அரசியல் கட்சி தொடங்கிய விஜயகாந்த்தின் தேமுதிக நாளுக்குநாள் கற்பூரமாய் கரைந்துவரும் இந்நிலையில், 

அதே அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி கட்சி தொடங்க உள்ள ரஜினி காந்த், தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடப் போவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. ரஜினியை காட்டிலும் அரசியலில் சீனியரான விஜயகாந்த் இழந்த செல்வாக்கை மீட்டெடுப்பதற்கான எண்ணத்தில் இருப்பதாகவும், தனக்கு பின்னால் அரசியல் கட்சி தொடங்கும் ரஜினி காந்த் 234 தொகுதிகளிலும் தனித்தே போட்டியிட போவதாக வந்துள்ள தகவல்,  தேமுதிக தலைமையை யோசிக்க வைத்திருப்பதாக கூறப்படுகிறது. 

இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்துள்ள தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், இந்த நிமிடம் வரையில் அதிமுக கூட்டணியில் தொடர்வதாக கூறியுள்ளார். ஆனாலும் வரும் சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் தேமுதிக தனித்துப் போட்டியிட தயாராக உள்ளது எனவும், வரும் ஜனவரியில் விஜயகாந்த் தலைமையில் நடக்கும் கட்சிப் பொதுக்குழு மற்றும் செயற்குழுவில் இது குறித்து முடிவு எடுத்து, கூட்டணி குறித்து அதிகாரப்பூர்வமாக அவர் அறிவிப்பார் எனவும் கூறியுள்ளார்.

ஆக மொத்தத்தில் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் விஜயகாந்த் பங்கேற்பார் டெல்லியில் போராடும் விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், நிவர், புரவி புயல் தாக்கத்தின் போது தமிழக அரசின் செயல்பாடுகளில் நிறையும் குறையும் உள்ளது. நீர் நிலைகள் தூர்வாரப்படாமல் வெள்ள நீர் வீணாக கடலில் கலந்துள்ளது இது சீரமைக்கும் கடமை அரசுக்கு தான் உள்ளது இவ்வாறு அவர் கூறியுள்ளார்.