தமிழகத்தில் 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டதாலும், திருப்பரங்குன்றம், , திருவாரூர் தொகுதிகளில் எம்எல்ஏக்கள் மறைந்துவிட்டதாலும் மொத்தம் 20 தொகுதிகள்  தற்போது காலியாக உள்ளன. அந்ததொகுதிகளில் அடுத்த 6 மாதங்களுக்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.

இந்நிலையில் இந்த 20 தொகுதிகளிலும், நடைபெறவுள்ள இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து, கட்சி நிர்வாகிகளிடம், பிரேமலதா ரகசிய கருத்து கேட்பு நடத்தி வருகிறார்

தேமுதிக  தலைவர் விஜயகாந்துக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளதால் அவரால் முழுமையாக  அரசியல் பணிகளில் ஈடுபட முடியவில்லை. இதனால், தன் மனைவி பிரேமலதாவிடம், கட்சி பணிகளை ஒப்படைத்து உள்ளார்.

இதையடுத்து பிரேமலதாவிற்கு, மாநில பொருளாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில்  கட்சியை பலப்படுத்தும் பணிகளில், பிரேமலதா கவனம் செலுத்தி வருகிறார். பல்வேறு அணி நிர்வாகிகளுடன், நாள்தோறும், அவர் ஆலோசனை நடத்தி வருகிறார்.

இந்த ஆலோசனை கூட்டங்களில், தமிழகத்தில் காலியாக உள்ள 20 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடந்தால், அதில் தேமுதிக போட்டியிடுவது குறித்து, கருத்து கேட்டு வருகிறார்.

இந்நிலையில் கட்சி நிர்வாகிகளிடம் பேசிய பிரேமலதா , 'கட்சி பணிகளுக்கு, கூடுதல் நேரம் செலவிட வேண்டும். பொறுப்பில் இருப்பவர்கள், செயல்படாமல் இருந்தால், பதவி பறிக்கப்படும்' என்று எச்சரித்தார்.

இருபது சட்டசபை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடந்தால், அதில் போட்டியிடுவது குறித்தும்,பிரேமலதா  கருத்து கேட்டு வருகிறார். அதற்கு பல நிர்வாகிகள், 'போட்டியிட வேண்டும்' என்று, கூறி வருவதாக தெரிவந்துள்ளது.

தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்ட பின், மாவட்ட செயலர்களுடன் ஆலோசித்து, நல்ல முடிவு எடுப்பதாக, பிரேமலதா தெரிவித்துள்ளதாக  அக்கட்சி வட்டாரத்தில் கூறப்படுகிறது.

இந்நிலையில் கட்சியினருடன் ஆலோசனை நடத்திய பின் செய்தியாளர்களிடம் பேசிய , பிரேமலதா எந்த தேர்தலை அறிவித்தாலும், அதை சந்திப்பதற்கு, தேமுதிக எப்போதும் தயாராக இருக்கிறது. நாடாளுமன்றத் தேர்தலுடன், சட்டசபைக்கும் தேர்தல் வருவதற்கான வாய்ப்பு இருப்பதாக, எங்களுக்கு தகவல் வருகிறது.இதனை சந்திப்பதற்கு, ஆளும்கட்சியினர் பயப்படுகின்றனர். ஆனால், தேமுதிகவுக்கு தேர்தல் குறித்த பயம் இல்லை என அதிரடியாக தெரிவித்தார்.