கால்நடைகளுக்கும் நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளதால் அவைகளையும் பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் கேட்டுக்கொண்டுள்ளார் வௌவால் மூலமாக கொரோனா வைரஸ் பரவ வாய்ப்பு உள்ளது  என்பதை மேற்கோள் காட்டியுள்ள விஜயகாந்த் , கால்நடைகளுக்கு பாதுகாப்பு வழங்க தமிழக அரசை வலியுறுத்தியுள்ளார் . கொரோனா  வைரஸ் நாடு முழுவதும் வேகமாக பரவி வருகிறது , இதுவரையில் இந்தியாவில் 12,456 பேருக்கு கொரோனா தொற்று  ஏற்பட்டுள்ளது , சுமார் 423 பேர் உயிரிழந்துள்ளனர் . 1513 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் ,  இந்தியாவிலேயே மகாராஷ்டிர மாநிலம் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளது ,  அங்க 3 ஆயிரத்து 81 பேருக்கு ஒரு  வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது .  டெல்லியில்  1578 பேருக்கும் ,  தமிழகத்தில்  1242  பேருக்கும் கொரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளது . ராஜஸ்தான் ,  மத்திய பிரதேசம் , உத்தரப் பிரதேசம் ,  குஜராத் ,  உள்ளிட்ட மாநிலங்கள் அடுத்தடுத்த நிலையில் உள்ளன .  இந்நிலையில் தமிழகத்தில் வைரஸ் பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி உள்ளது .  இதுவரையில்  தமிழகத்தில் 14 பேர் உயிரிழந்துள்ளனர், மேலும் இந்த வைரஸ் சமூகப் பரவலாக மாறுவதை தடுக்க ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது .  இதனால்   லட்சக்கணக்கான மக்கள் வாழ்வாதாரத்தை இழந்து வீடுகளில் தவித்து வருகின்றனர் ,  சாலைகள் தெருக்கள் என  நாடே வெறிச்சோடி காணப்படுகிறது .   மக்களைச் சார்ந்து வாழ்ந்து வரும் ஆடு ,  மாடு ,  கோழி ,  நாய் ,  பூனை உள்ளிட்ட கால்நடைகள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளன.  நாய் உள்ளிட்ட விலங்குகள்  குடிக்க தண்ணீர்கூட கிடைக்காமல் உயிருக்கு போராடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன . இந்த துயர நிலை குறித்து தனது ஆதங்கத்தை வெளிபடுத்தியுள்ள தேமுதிக தலைவர் விஜயகாந்த் ,  தமிழக அரசுக்கு கோரிக்கை ஒன்று வைத்துள்ளார் அதில்,  கொரோனா வைரசிலிருந்து  தமிழக மக்களுக்கு பாதுகாப்பு வழங்குவது போல் ,  நம்மை சார்ந்துள்ள ஆடு ,  மாடு , கோழி ,  நாய் ,  பூனை போன்ற பல்வேறு கால்நடைகளுக்கும் பறவைகளுக்கும் உரிய பாதுகாப்பு வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் . 

 

தற்போது கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில்  கொரோனா வைரஸ் காரணமாக பல கால்நடைகள் உணவு மற்றும்  குடிக்க தண்ணீர் கிடைக்காமல் அவதிப்பட்டு வருகின்றன. மேலும் கால்நடைகளுக்கு கொரோனா பரவும் அபாயம் உள்ளது ,  வௌவால்கள் மூலம் கொரோனா பரவ ஏராளமான வாய்ப்புகள் உள்ளதாக அண்மையில் வெளியான புள்ளி விவரங்கள்  தெரிவிக்கின்றன .  எனவே தமிழகம் முழுவதும் உள்ள அரசு கால்நடை மருத்துவமனைகளில் கால்நடைகளுக்கு உரிய சிகிச்சை அளித்து அவற்றைப் பாதுகாக்க வேண்டியது நமது கடமை என கேப்டன் விஜயகாந்த் தெரிவித்துள்ளார் .  கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு  சிகிச்சை அளிக்க தனது கல்லூரியை பயன்படுத்திக் கொள்ளலாம் என மக்களுக்காக கல்லூரியை வழங்கியுள்ள நிலையில் ,  தற்போது உணவு குடிநீர் இன்றி தவித்து வரும் கால்நடைகளின் மீது விஜயகாந்த் கரிசனம் காட்டியிருப்பது ,  அவரது தொண்டர்களை  மட்டுமல்ல மாந்தநேயம் உள்ள அனைவரையும் நெகிழ்ச்சியடைய வைத்துள்ளது.