தேமுதிக மீண்டும் எழ முயற்சி செய்துகொண்டிருக்கும் நிலையில், அக்கட்சியிலிருந்து நிர்வாகிகள் திமுகவுக்கு படையெடுக்கத் தொடங்கிவிட்டார்கள். தேமுதிகவிலிருந்து ஆட்களை இழுக்க திமுகவினருக்கு ஸ்பெஷல் அசைன்மெண்ட் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.


தேமுதிகவுடன் அணி சேர 2016-ல் திமுக தலைமை கடும் முயற்சி செய்தது. ஆனால், திமுகவை உதாசீனப்படுத்திய தேமுதிக, மக்கள் நலக் கூட்டணியில் இணைந்தது. இதனால், கோபமடைந்த திமுக  தேமுதிக நிர்வாகிகளை குறி வைத்தது. அப்போது முதலே தேமுதிக நிர்வாகிகளை தங்கள் கட்சிக்கு இழுக்கத் தொடங்கியது திமுக. அது இப்போது முதல் தொடர்ந்துகொண்டே இருக்கிறது. கடந்த இரு தினங்களாக தேமுதிக நிர்வாகிகள் திமுகவில் ஐக்கியமாகிவருகிறார்கள். உள்ளாட்சித் தேர்தலிலும் அதிமுகவுடன் கூட்டணி தொடரும் என்று அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா அறிவித்த பிறகு, திமுகவுக்கு வரத் தொடங்கியிருக்கிறார்கள் தேமுதிக நிர்வாகிகள்.

 
இரு தினங்களுக்கு முன்பு டெல்லி மாநில தேமுதிக நிர்வாகிகள் திமுகவில் ஐக்கியமானார்கள். முன்னாள் தேமுதிக எம்.எல்.ஏ.வும் தற்போதைய சேலம் திமுக எம்.பி.யுமான பார்த்திபன் ஏற்பாட்டில் இந்த நிர்வாகிகள் திமுகவில் சேர்ந்தார்கள். அடுத்தகட்டமாக தேமுதிகவைச் சேர்ந்த 5,000 டெல்லி தொண்டர்கள் திமுகவில் இணைய இருப்பதாகச் சொல்கிறார்கள். இதற்கிடையே நேற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த தேமுதிக நிர்வாகிகள் உள்பட 50 பேர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் சேர்ந்தார்கள். திமுக எம்.எல்.ஏ. சுரேஷ் ராஜன் ஏற்பாட்டின் பேரில் இவர்கள் திமுகவில் இணைந்ததாகக் கூறப்படுகிறது.


தற்போது தேமுதிகவினர் அடுத்தடுத்த நாட்களில் திமுகவில் இணைந்ததற்கு அக்கட்சி  தலைமையின் உத்தரவே காரணம் என்ற தகவல் வெளியாகி உள்ளது. தேமுதிகவினரை வளைத்து திமுகவில் சேர்க்க உத்தரவிட்ட காரணத்தாலேயே திமுக நிர்வாகிகள் தேமுதிக நிர்வாகிகளின் மனதை கரைத்து கட்சியில் சேர்ப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அடுத்தடுத்த நாட்களில் திமுகவில் ஐக்கியமாகும் தேமுதிகவினர் எண்ணிக்கை இன்னும் கூடும் என்றும் சொல்கிறார்கள் திமுகவினர்.

 
விஜயகாந்த் உடல் நிலை பாதிப்பு, தேர்தல் தோல்வி என துவண்டுபோயிருக்கும் தேமுதிக, நீண்ட நாள் கழித்து இப்போதுதான் திருப்பூரில் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்துக்கு ஏற்பாடு செய்துவருகிறது. இந்நிலையில் தேமுதிகவை கரைக்கும் முயற்சியில் திமுக இறங்கியிருப்பதால் தேமுதிக தலைமை கடும் அப்செட் ஆகியிருப்பதாகக் கூறப்படுகிறது.