மக்களவை தேர்தலில் 3 சீட், ஒரு ராஜ்யசபா எம்.பி தருவதாக தே.மு.தி.கவிற்கு புதிய ஆஃபர் ஒன்றை தி.மு.க முன்வைத்துள்ளது.

தி.மு.க – தே.மு.தி.க கூட்டணி கிட்டத்தட்ட இறுதி கட்டத்தில் உள்ளதாக கூறப்படுகிறது. அதிமுக எப்போது கேட்டாலும் தேமுதிகவுடன் பேசிக் கொண்டிருப்பதாக கூறுகிறது. ஆனால் உண்மையில் கடந்த மூன்று நாட்களாக தேமுதிக – அதிமுக தரப்பு பேச்சுவார்த்தை கிடப்பில் போடப்பட்டுள்ளது. பா.ஜ.க தரப்பும் கூட தே.மு.தி.கவுடன் தொடர்ச்சியாக பேசிக் கொண்டிருந்த நிலையில் இரண்டு நாட்களாக எந்த முன்னேற்றமும் இல்லை. தமிழிசை கேப்டனை சந்திக்க நேரம் கேட்டுள்ள நிலையில், அது குறித்து தேமுதிக எந்த பதிலும் சொல்லாமல் இருந்து வருகிறது.

 

கடைசியாக பியூஸ் கோயல் சென்னை வந்த போது சுதீசிடம் பேசியதோடு சரி. அதன் பிறகு பா.ஜ.க – தே.மு.தி.க பேசவில்லை என்கிறார்கள். அதே சமயம் திமுகவில் சபரீசன், கனிமொழி உள்ளிட்டோருடன் பிரேமலதாவே நேரடியாக பேசிக் கொண்டிருப்பதாக கூறுகிறார்கள். இரண்டு தொகுதிகள் என பேச்சுவார்த்தை ஆரம்பமான நிலையில் 3 தொகுதிகள் வரை தரத் தயார் என்று நேற்று முன் தினம் பேச்சு ஓடியுள்ளது. 

இந்த நிலையில் நேற்று ஒரு ராஜ்யசபா சீட் தருவதற்கும் தயார் என்று தி.மு.க ஒரு பார்முலாவை வைத்துள்ளது. ஆனால் அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு கொடுக்கப்பட்டுள்ள இடங்கள் வேண்டும் என்று அடம்பிடித்து வருகிறார் பிரேமலதா. ஆனால் தி.மு.கவோ கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு ஒதுக்க வேண்டிய தொகுதிகளின் எண்ணிக்கையை சுட்டிக்காட்டி ஏழு தொகுதிகளுக்கு வாய்ப்பில்லை என்று கூறி வருகிறது. இந்த நேரத்தில் பிரேமலதாவுடன் பேசிய கனிமொழி காங்கிரஸ் தரப்பில் இரண்டு தொகுதிகளை கேட்டுப் பாருங்கள், திமுகவில் மேலும் ஒரு தொகுதிக்கு நான் பேசுகிறேன் என்று கூறியதாக சொல்லப்படுகிறது.

ஆனால் பிரேமலதாவோ அதற்கான வாய்ப்பு இல்லை நாங்கள் வர விரும்புவது தி.மு.க கூட்டணிக்கு தான், எனவே தொகுதி உடன்பாடு பிரச்சனையை தி.மு.க தான் தீர்க்க வேண்டும் என்று வெளிப்படையாக கூறியுள்ளார். இதனை தொடர்ந்தே டெல்லியில் முகுல் வாஸ்னிக்கை சந்தித்து கனிமொழி பேசியுள்ளார். அப்போது தே.மு.தி.கவுக்கு இரண்டு தொகுதிகளை விட்டுக் கொடுக்கும்படி கனிமொழி முகுல் வாஸ்னிக்கிடம் கூறியுள்ளார்.

 

முகுல் வாஸ்னிக் ஏற்கனவே தேமுதிகவுடன் நல்ல நட்பில் உள்ளவர். அந்த அடிப்படையில் தேமுதிக கூட்டணிக்கு வரவேண்டும் என்று அவரும் விரும்புகிறார். இதேபோல் ராகுலும் கூட கமல் இல்லை என்றால் விஜயகாந்த் அவசியம் என்று கருதுகிறார். ஆனால் இரண்டு தொகுதிகளை விட்டுக் கொடுப்பது என்பது தன்னிச்சையாக எடுக்க முடியாத முடிவு என்று கனிமொழியிடம் முகுல் வாஸ்னிக் தெரிவித்துள்ளார்.

எனவே இந்த விவகாரம் விரைவில் ராகுலிடம் பஞ்சாயத்திற்கு செல்லும் என்று கூறுகிறார்கள். ஒரு வேலை தொகுதிகளை விட்டுக் கொடுக்க காங்கிரஸ் முன்வந்தால் அடுத்த ஒரு சில நாட்களில் தி.மு.க – தேமுதிக கூட்டணி அறிவிக்கப்பட்டுவிடும். இல்லை என்றால் அரசியல் அரங்கில் வேறு சில முன்னேற்றங்களை நிச்சயம் பார்க்க நேரிடும்.