கன்னியாகுமரி தேமுதிக மேற்கு மாவட்ட செயலாளர் ஜெகநாதன் உள்ளிட் 30-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் அக்கட்சியில் இருந்து விலகி திமுகவில் இணைந்தனர்.

நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் திமுக கூட்டணி மாபெரும் வெற்றி பெற்றது. மெகா கூட்டணி என்று அழைக்கப்பட்ட அதிமுக ஒரு தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்று படுதோல்வி அடைந்தது. அதிமுக கூட்டணியில் இடம் பெற்றிருந்த தேமுதிக 4 தொகுதிகளிலும் டெபாசிட் வாங்க முடியாமல் படுதோல்வி அடைந்தது. இதனால், தேமுதிக மாவட்ட செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் அதிருப்தியில் இருந்து வந்தனர். மேலும், தொண்டர்களும் விஜயகாந்த் முன்பு மாதிரி கட்சி பணியில் இல்லை. அவரது குடும்பம் கட்சியை வழி நடத்தும் விதமும் சரியில்லை என்று புலம்பி வந்தனர்.

 

இந்நிலையில், தேர்தல் தோல்வியால் தினகரன் கட்சியிலிருந்து பல்வேறு நிர்வாகிகள் விலகி திமுக மற்றும் அதிமுக கட்சியில் இணைந்து வருகின்றனர். அதே போல் விஜயகாந்த்தின் கட்சியிலிருந்து நிர்வாகிகள் வேறு கட்சியில் இணைந்து வருகின்றனர். 

இதனிடையே, கன்னியாகுமரி தேமுதிக மேற்கு மாவட்ட செயலாளர் ஜெகநாதன் உள்ளிட் 30-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் அக்கட்சியில் இருந்து விலகி திமுகவில் இணைந்தனர். சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலினை முன்னிலையில் அவர்கள் திமுகவில் தங்களை இணைத்து கொண்டனர். இந்த விழாவில் திமுக இளைஞரணி மாநில செயலாளர் உதயநிதி ஸ்டாலின் உடனிருந்தார். 

பின்னர் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த ஜெகநாதன், தலைவர் தன்னிசையாக செயல்பட முடியாததால் தேமுதிக மூழ்கும் கப்பலாக உள்ளது. முடிவு எடுக்கும் நிலையில் அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் இல்லை எனவும் குறிப்பிட்டார்.