தி.மு.க.,வுடன் பேசுவதைப் போலவே, அ.தி.மு.க., உடனும், தே.மு.தி.க., தொடர்ந்து கூட்டணி பேச்சு நடத்தி வருகிறது. அதில், 'பா.ம.க.,வை விட, கூடுதலாக ஒரு தொகுதி வேண்டும்' என, விஜயகாந்தின் மைத்துனர், சுதீஷ் பிடிவாதமாக உள்ளார். இதை, அ.தி.மு.க., தலைமை ஏற்கவில்லை. கடைசியாக, ஐந்து தொகுதிகள் ஒதுக்க, அ.தி.மு.க., முன்வந்துள்ளது.

இந்நிலையில், 'ஐந்து நாடாளுமன்றத்  தொகுதிகளை ஏற்கத் தயார்; அத்துடன், இடைத்தேர்தல் நடக்கவுள்ள சட்டசபை தொகுதிகளில், ஆம்பூர், சோளிங்கர், குடியாத்தம், ஓசூர் ஆகிய நான்கில், ஏதாவது இரண்டு தொகுதிகளை தரவேண்டும்' என, தே.மு.தி.க.,புதிய நிபந்தனை விதித்துள்ளது. பா.ம.க.,வுக்கு ஒதுக்கிய தொகுதிகளுக்கு இணையான இடம் பெறும் வகையில், இந்த நிபந்தனையை, தே.மு.தி.க., வைத்துள்ளது.


 
இரு சட்டசபை தொகுதிகளில் வெற்றி பெற்றால், சட்டசபையில், அரசின் மீதான நம்பிக்கை ஓட்டெடுப்பு நடந்தால், பெரிய அளவில் காய்நகர்த்தலாம் என்றும், தே.மு.தி.க., கருதுகிறது. ஆனால், சட்டசபை தொகுதிகளை ஒதுக்குவதில், அ.தி.மு.க.,விற்கு உடன்பாடில்லை.

இதற்கிடையே, வரும், 6ம் தேதி, பிரதமர் மோடி தலைமையில், சென்னையில், பொதுக்கூட்டம் நடக்கவுள்ளது. இந்த கூட்டத்தில், கூட்டணி கட்சிகளின் தலைவர்களை மேடை ஏற்ற வேண்டிய நெருக்கடி, அ.தி.மு.க.,வுக்கு உள்ளது. ஆனால், தே.மு.தி.க.,வின் புதிய நிபந்தனையால், இ.பி.எஸ்., - ஓ.பி.எஸ்., தரப்பு தவித்து வருகிறது.