வரும் ஏப்ரல், மே மாதங்களில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான பணிகளில் பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தீவிரமாக இறங்கியுள்ளன. தமிழகத்தைப் பொறுத்தவரை திமுக – காங்கிரஸ் கூட்டணி உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்த கூட்டணியில் மதிமுக, இடது சாரிகள் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிகள் இடம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதே போல் அதிமுக – பாஜக- பாமக கட்சிகள் இணைந்து ஒரு மெகா கூட்டணியை  உருவாக்க முயற்சி நடைபெற்று வருகிறது. இந்த கூட்டணியில் தேமுதிக இடம் பெறும் என்றும் அதற்கான பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

ஆனால் தேமுதிக சார்பில் தற்போது தான் கூட்டணி பேச்சு வார்த்தைக் குழு நியமிக்கப்பட்டுள்ளதாக சுதீஷ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், தேமுதிகவின் குழு தற்போது கூட்டணி குறித்து பேச்சு வார்த்தை நடத்திக் கொண்டிருப்பதாக தெரிவித்தார்.


அது குறித்து ஒரு நாளைக்கு மூன்று முறை அமெரிக்காவில் உள்ள விஜயகாந்துக்கு தகவல் தெரிவிப்பதாகவும் சுதீஷ் கூறினார்.

தேமுதிகவைப் பொறுத்தவரை நாடாளுமன்றத் தேர்தலில் தேசிய கட்சிகளுடன்தான்  கூட்டணி அமைக்கவுள்ளதாகவும், விஜயகாந்த் இந்த மாத இறுதிக்குள் தமிழகம் திரும்ப உள்ளதாகவும்  தெரிவித்தார்.

மேலும் விஜயகாந்த சென்னை வந்ததும் யாருடன் கூட்டணி என்பது குறித்து அறிவிப்பார் என்றும் சுதீஷ் தெரிவித்தார்.