எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலையொட்டி தமிழகத்தில் திமுக, அதிமுக தலைமையில் கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது. திமுக கூட்டணியில் திமுக 20 இடங்களிலும், காங்கிரஸ் 10 இடங்களிலும் இடது சாரிகள் தலா இரண்டு இடங்களிலும் போட்டி இடுகின்றன.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி 2 இடங்களிலும், மதிமுக, இந்திய யூனியன் முஸ்லீம் லீக், கொமதேக, இந்திய ஜனநாயக கட்சி உள்ளிட்ட கட்சிகள் தலா ஓர் இடத்திலும் போட்டியிடுகின்றன,

இதே போல் அதிமுக கூட்டணி சார்பில் பாஜக 5 இடங்களிலும், பாமக 7 இடங்களிலும், புதிய தமிழகம், புதிய நீதி கட்சி, என்.ஆர்.காங்கிரஸ் ஆகிய கட்சிகள் தலா ஓர் இடத்திலும் போட்டியிடுகின்றன.
 
தேமுதிகவிடம் கூட்டணி பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதால் அந்த கூட்டணி இறுதி செய்யப்படாமல் உள்ளது. இந்நிலையில் தேமுதிக கூட்டணி குறித்து முடிவு எடுக்க முடியாமல் திணறி வருகிறது. அதிமுகவுடன் நடத்தப்பட்டு வரும் பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் தொடர்ந்து இழுபறி நீடிக்கிறது.

அந்த கூட்டணியில் பாமகவுக்கு  இணையாக 7 தொகுதிகள் வேண்டும் என தேமுதிக கோரிக்கை வைத்தது. ஆனால் அதிமுக 4 தொகுதிகள் மட்டுமே ஒதுக்கப்படும் என கறாராக சொல்லிவிட்டது.

ஏற்கனவே திமுக கூட்டணி கதவுகளை மூடி விட்டதால் இனி அங்கு போய் நிற்க முடியாது என்பதை அந்தக்கட்சி  நன்கு உணர்ந்துள்ளது. 
இந்நிலையில் 4 தொகுதிகளுக்கு தேமுதிக ஒத்துக் கொண்டாலும், அந்த கட்சிக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகள் தேமுதிகவினரை கோபத்தின் உச்சிக்கே கொண்டுபோய் விட்டுள்ளது. 

நீலகிரி, தூத்துக்குடி, நாகை மற்றும் டெல்டா பகுதியில் ஒரு தொகுதி என தேமுதிகவிற்கு 4 தொகுதிகள் அதிமுக ஒதுக்கியதாக தெரிகிறது. அதிமுக பரிந்துரைத்த இந்த 4 தொகுதிகளில் வெற்றி வாய்ப்பு இல்லையென தேமுதிக நிராகரித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
 
இதையடுத்து தனித்து களம் கண்டால் என்ன? என்ற மனநிலையில் கோயம்பேடு அலுவலகத்தில் தேமுதிக நிர்வாகிகள் விவாதிப்பதாகவும் தினகரன் கட்சியுடன் கூட்டணி சேர்ந்தால் என்ன தவறு எனவும் தேமுதிக நிர்வாகிகள் மத்தியில் விவாதம் நடந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.