உள்ளாட்சி தேர்தலில் 2 மேயர் பதவிகள் உள்ளிட்ட 20 சதவீத இடங்கள் வேண்டும் என்று தேமுதிக தரப்பில் இருந்து வந்த கோரிக்கையை பார்த்து அதிமுக தலைமை தலை சுற்றிப் போய் கிடக்கிறது.

உள்ளாட்சி தேர்தல் வரும் 20ந் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. நாடாளுமன்ற தேர்தலில் அமைத்த கூட்டணியுடன் உள்ளாட்சி தேர்தலை எதிர்கொள்ள அதிமுக வியூகம் வகுத்துள்ளது. அதன்படி கூட்டணி கட்சிகளுடன்தற்போது திரைமறைவில் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. முதற்கட்டமாக கூட்டணி கட்சிகளின் விருப்பத்தை தெரிந்து கொள்ள அவர்களின் எதிர்பார்ப்பை தெரிவிக்குமாறு தேமுதிகவிடம் அதிமுக தலைமை கேட்டுள்ளது.

இதனை தொடர்ந்து 2 மேயர் பதவிகள், 10 நகர்மன்ற சேர்மன் பதவிகள், பேரூராட்சி தலைவர் பதவிகளில் 20 சதவீதம், ஊராட்சி மன்ற தலைவர் பதவிகளில் 20 சதவீதம், இது தவிர மாவட்ட பஞ்சாயத்து தலைவர் பதவிகள் 2, ஒன்றிய குழு தலைவர் பதவிகள் 20 சதவீதம், அனைத்து கவுன்சிலர் இடங்களையும் சேர்த்து 20 சதவீதம் என தங்கள் கோரிக்கையை அதிமுகவிடம் வழங்கியுள்ளது தேமுதிக.

அதிமுக கூட்டணியில் ஏற்கனவே பாஜக, பாமக ஆகிய இரண்டு பெரிய கட்சிகள் உள்ளன. அவர்களின் விருப்பங்களையும் தேமுதிக விருப்பங்களை சேர்த்து வைத்து பார்த்தால் அதிமுகவிற்கு போட்டியிட இடங்களே இருக்காது என்பது தான் நிதர்சனம். அந்த அளவிற்கு தேமுதிக மட்டும் அல்ல பாமக, பாஜகவும் அதிமுக தலைமையை நெருக்கி வருகின்றன.

ஆனால் இடைத்தேர்தல் வெற்றி கொடுத்த ஜோரில் இருக்கும் அதிமுக தலைமையோ உள்ளாட்சி தேர்தலை பொறுத்தவரை பேச்சுவார்த்தை, பேரம் எல்லாம் கிடையாது. ஜெயலலிதா இருந்த போது பின்பற்றிய பாணி தான் என்று கூறி அதிர வைக்கிறார்கள். அப்படிஎன்றால் கொடுப்பதை கொடுப்போம் வாங்கிக் கொள்ள வேண்டும் என்பது தானாம்.