கொளத்தூரில் நிவாரண உதவிகளை வழங்கிக் கொண்டிருந்த மு.க.ஸ்டாலின் திடீரென அருகாமையில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் பிறகு ராமச்சந்திரா மருத்துவமனைக்கும் அழைத்துச் செல்லப்பட்டதால் திமுக தொண்டர்கள் பதற்றம் அடைந்தனர்.

சென்னையில் கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் திமுக சார்பில் தொடர்ந்து நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் மு.க.ஸ்டாலினின் சொந்த தொகுதியான கொளத்தூரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஏழு இடங்களில் நிவாரணப் பொருட்களை வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. ரெட்டேரி பகுதியில் ஸ்டாலின் முதலில் நிவாரணப் பொருட்களை வழங்கிக் கொண்டிருந்தார். சுமார் 500 பேருக்கு நேரடியாக ஸ்டாலின் பொருட்களை வழங்க திட்டமிடப்பட்டிருந்தது.

ஆனால் ஒரு 100 பேருக்கு ஸ்டாலின் நிவாரணப் பொருட்களை வழங்கிய நிலையில் திடீரென தனக்கு தாகமாக இருப்பதாக கூறி தண்ணீர் கேட்டுள்ளார். உடனடியாக உதவியாளர் தண்ணீர் கொண்டு வந்து கொடுத்த நிலையில் மயக்கம் வருவது போல் உள்ளது வீட்டிற்கு சென்றதும் பிபி செக் செய்ய வேண்டும் என்று மாவட்டச் செயலாளர் சேகர் பாபுவிடம் கூறியுள்ளார் ஸ்டாலின். எதற்கு வீட்டிற்கு செல்லும் வரை காத்திருக்க வேண்டும் அருகாமையில் உள்ள மருத்துவமனைக்கு சென்று செக் செய்து கொள்ளலாம் என்று கூற ஸ்டாலினும் அதற்கு ஓகே சொல்லிவிட்டார்.

இதனை அடுத்து அருகாமையில் உள்ள தனியார் மருத்துவமனையை தொடர்பு கொண்ட சேகர்பாபு, ஸ்டாலின் அங்கு வர உள்ளதை தெரிவித்து ஏற்பாடுகளை செய்யுமாறு கேட்டுக் கொண்டார். இதற்கிடையே ஸ்டாலின் தன்னால் தொடர்ந்து நிவாரண உதவிகளை வழங்க முடியவில்லை, ஒரு மாதிரி கேராக உள்ளது என்று கூற பதறிப்போய்விட்டனர் உடன் இருந்த நிர்வாகிகள். தகவல் உடனடியாக துர்கா ஸ்டாலினுக்கு தெரிவிக்கப்பட அவர் அறிவுறுத்தலின் படி அருகாமையில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார் சேகர்பாபு.

அங்கு அவருக்கு பிபி செக் செய்ததில் வழக்கதை விட ரத்த அழுத்தம் குறைவாக இருந்தது தெரியவந்துள்ளது. இரவில் சரியாக தூங்கவில்லை என்பதால் அப்படி இருக்கலாம் என ஸ்டாலின் கூற எதுவாக இருந்தாலும் ஒரு ஒரு மணி நேரம் இங்கு ஓய்வு எடுத்துவிட்டு நீங்கள் செல்லலாம், உடனடியாக வெளியே சென்றால் மறுபடியும் இதே போன்று மயக்கம் வர வாய்ப்புள்ளது என்று டாக்டர்கள் கூறியுள்ளனர். இதனை ஏற்று மருத்துவமனையில் ஓய்வில் இருந்த ஸ்டாலின் பிறகு சிறிது பழச்சாறு பருகிவிட்டு மறுபடியும் பிபி டெஸ்ட் செய்துள்ளார். இந்த முறை அவரது ரத்த அழுத்தம் இயல்பாக இருந்துள்ளது.

இதனை அடுத்து மறுபடியும் நலத்திட்ட உதவிகளை வழங்க புறப்பட்ட ஸ்டாலினை, நீங்கள் எதற்கும் ஒரு மாஸ்டர் செக் அப் செய்து கொள்வது நல்லது, குறிப்பாக இதயத்தின் செயல்பாடுகளை கண்காணிக்க வேண்டும் என்று கூறியுள்ளனர். இந்த தகவல் ஸ்டாலினின் தனி மருத்துவரான தணிகாசலத்திடம் தெரிவிக்கப்பட்டது. அவர் போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் இருப்பதால், ஸ்டாலினை அங்கு அழைத்துச் செல்வது என்று முடிவெடுக்கப்பட்டது.

இதனை அடுத்து கொளத்தூரில் இருந்து ராமச்சந்திரா மருத்துவமனைக்கு சென்ற மு.க.ஸ்டாலினை டாக்டர் தணிகாசலம் பரிசோதனை செய்துள்ளார். சி.டி ஸ்கேர், எக்கோ உள்ளிட்ட சோதனைகள் எடுக்கப்பட்டன. இந்த சோதனை முடிவுகளில் எல்லாம் நார்மல் என்றே வந்துள்ளது. இதனை அடுத்து வீட்டில் ஓய்வெடுக்குமாறு கூறி ஸ்டாலினை அனுப்பி வைத்துள்ளார் மருத்துவர். இருந்தாலும் கூட சில நாட்களுக்கு உடலை வருத்திக் கொள்ள வேண்டாம் என்று அவருக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாம்.