divakaran son jai anand talks about jayalalitha
எனது தந்தை திவாகரன் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவை இரண்டு முறை காப்பாற்றியுள்ளார் என்று ஜெய் ஆனந்த் ஆங்கில தொலைக்காட்சி ஒன்றுக்கு அதிரடியாக பேட்டி அளித்துள்ளார்.
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுக பல்வேறு அணிகளாக உடைந்து சிதறியது. சசிகலா தரப்பிலேயே திவாகரன், டிடிவி தினகரன், நடராஜன் அணிகளென தனித்தனியாக பிரிந்தது.
அதிமுகவில், சசிகலா தரப்பில் டிடிவி தினகரன் சிறந்த கட்சி நிர்வாகியாக 90-களில் செயல்பட்டவர். அதற்குப் பிறகு டாக்டர் வெங்கடேஷ், இளைஞர் இளம் பெண் பாசறை நிர்வாகியாக செயல்பட்டுள்ளார். இதற்கு அடுத்த தலைமுறை என்று பார்க்கும்போது, திவாகரனின் மகன் ஜெய் ஆனந்த் அரசியலில் மிகுந்த ஆர்வம் கொண்டவராக இருந்து வருகிறார்.

அதிமுக பிளவுக்குப் பிறகு, இளவரசியின் மகன் விவேக் வசம் ஜெயா தொலைக்காட்சி மற்றும் பிற நிறுவனங்களும் சென்றது. திவாகரன், அவரது மகன் ஜெய் ஆனந்த், கட்சி விவகாரங்களில் நேரடியாக கவனம் செலுத்தினார்.
அதிமுகவில் ஓ.பன்னீர்செல்வம் பிரிந்த பிறகு, பிரச்சனை பெரிதாக வெடித்த நிலையில், திவாகரனும், ஜெய் ஆனந்தும் ஆளுநரை வித்யாசாகர் ராவை சந்தித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு, மன்னார்குடியில் நடைபெற்ற விழா ஒன்றில் பேசிய திவாகரன், தனது அக்காள் கணவன் நடராசன், கட்சியையும் ஜெயலலிதாவையும் பாதுகாத்ததாகவும், 89-ல் கட்சி பிளவுபட்டபோது இரட்டை இலையை மீட்டார் என்றும் பேசி பரபரப்பை ஏற்படுத்தினார்.

இந்த நிலையில் சசிகலா சிறைக்கு சென்றுவிட்ட பிறகு, எடப்பாடி தரப்பினர் கை ஓங்கிய நிலையில் ஒதுங்கி இருந்த ஜெய் ஆனந்த் தற்போது, தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பரபரப்பாக பேட்டி அளித்துள்ளார். அதில், பல்வேறு விஷயங்களை அவர் மனம் திறந்து பேசியுள்ளார்.
அந்த பேட்டியில், தனது தந்தை திவாகரன், ஜெயலலிதாவை இரண்டு முறை காப்பாற்றியுள்ளதாக தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
