ஸ்டாலினை நெருங்கும் திவாகரன்! அடுத்தக் கட்டத்தை நெருங்கும் ஆட்சிக்கலைப்பு ஆட்டம்!

ஜெயலலிதா மறைவுக்குப்பின் நாளுக்கு நாள் மணிக்கு மணி நொடிக்கு நொடி என என தமிழக மக்களை பரபரப்பாகவே வைத்திருக்கிறது அதிமுக. சசி அரியாசனத்துக்கு ஆசைப்பட்டு ஓபிஎஸை இறக்கிவிட்டதன் விளைவே இன்று மைசூரு சொகுசு விடுதிவரை சென்றுள்ளது.

ஒரு சாதாரண வாக்காளன் எதுவுமே செய்ய முடியாமல் வேடிக்கை பார்ப்பதை போலவே, எந்தவித அசைவும் இல்லாமல் தடுக்கவும் முடியாமல் எதிர்க்கவும் முடியாமல் திணறி நிற்கிறது 6 முறை  ஆண்ட எதிர்க்கட்சி. எதிர்க்கட்சிகள் எதுவும் செய்யவேண்டாம் அவர்களே அடித்துக்கொள்வார்கள், அவர்களே ஆட்சியை கலைத்து விடுவார்கள் என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

அரசியல் விமர்சகர்களின் கணிப்பை போலவே அரியாசனத்தில் அமரவைத்த சசி குடும்பத்தை தூக்கியடித்துவிட்டு பிரிந்து போன பன்னீரும் எடப்பாடியும் ஒன்று சேர்ந்தார்கள். முதல்வர், துணை முதல்வர் என பதவியை பங்குபோட்டுக்கொண்டு மாஸ் கட்டினார்கள். ஆனால் இரண்டு முதல்வர்களை தமிழகத்துக்கு தந்த தினகரன் அடுத்த கட்ட நடவடிக்கையில் இறங்கியுள்ளார்.

தமக்கு ஆதரவாக உள்ள 19 எம்.எல்.ஏக்களை புதுச்சேரி சொகுசுவிடுதியில் தங்கவைத்து, ஆளுநரை சந்தித்து எடப்பாடிக்கு தந்த ஆதரவை வாபஸ் வாங்கினார். ஆனால் ஆளுநரோ கைவிரித்துவிட்டார். இதை சற்றும் எதிர்பாராத தினகரன் ஆட்சியை கலைக்க மும்முரம் ஆகியுள்ளார். இதன் முதல்கட்டமாக புதுவை சொகுசுவிடுதியிலிருந்த தனது ஆதரவு எம்.எல்.ஏக்களை மைசூரில் உள்ள தனியார் சொகுசு விடுதியில் தங்கவைத்துவிட்டு, ஆட்சியை கலைக்க அடுத்தகட்ட வேலையில் இறங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஸ்டாலினை பார்த்து சிரித்தார் என்ற ஒரே காரணத்தை முன்வைத்து ஓபிஎஸை முதல்வர் நாற்காலியிலிருந்து இறக்கிவிட்டு, கூவத்தூர் சொகுசு சிறையில் ஏம்.எல்.ஏக்களை வைத்து எடப்பாடியாருக்கு மகுடம் சூட்டினார் சசிகலா. ஆனால் எட்டப்படியாரும் சசி குடும்பத்துக்கு எதிரான சதிவேலையில் இறங்கியதால், ஆட்சியை கலைக்க முயன்றது மன்னார்குடி குடும்பம். நெஞ்சில் குத்திய எடப்பாடியையும், முதுகில் குத்திய பன்னீரையும் இனி பதவியில் தொடர விடக்கூடாது என்ற முனைப்பில் திமுக செயல் தலைவர் ஸ்டாலினை சந்திக்க தூது அனுப்பியதாம் மன்னார்குடி குடும்பம். 

ஒன்று சேர்ந்த துரோகிகளை வீழ்த்த எதிரியிடம் தஞ்சமடைவதே மேல் என்று திமுகவின் செயல் தலைக்கு தூது அனுப்பியுள்ளதாம். அதுமட்டுமல்ல ஸ்டாலினை நேரடியாகவே பாராட்டி வருகிறார் சசியின் சகோதரர் திவாகரன். இந்த பாராட்டின் முதல்கட்டமாக ஸ்டாலின் - திவாகரன் இடையே விரைவில் ரகசிய சந்திப்பு நடக்கவுள்ளதாக தகவல் கசிந்துள்ளது.

ஆனால், திமுகவின் முக்கிய தலைகள் மன்னார்குடி குடும்பத்துடன் கூட்டு சேர்ந்து ஆட்சியை கலைத்தால் அது திமுகவுக்குதான் கெட்ட பெயர் வரும் என்பதால் ஸ்டாலினை தடுத்து வருகிறார்களாம்.

என்ன நடக்கப்போகிறது என்பதை வேடிக்கை பார்ப்போம்!