கோவை தெற்கு தொகுதியில் பாஜகவினர் டோக்கன் வழங்கி பண பட்டுவாடா நடத்துவதாக எதிர்க்கட்சிகள் சார்பில் புகார் கூறப்பட்டன. இந்த விவகாரத்தில் காங்கிரஸ் வேட்பாளர் மயூரா ஜெயக்குமார் போராட்டமும் நடத்தினார். இந்நிலையில் சென்னையில் வாக்களித்துவிட்டு கோவைக்கு திரும்பிய மக்கள் நீதி மய்யம் வேட்பாளரும் அக்கட்சியின் தலைவருமான கமல்ஹாசன், அக்கட்சியின் தேர்தல் முகவர் உதயகுமார் ஆகியோர் கோவை தெற்கு தொகுதி தேர்தல் அலுவலர் சுப்ரமணியனைச் சந்தித்து வானதி சீனிவாசன் மீது புகார் அளித்தனர்.
அந்தப் புகாரில், “கோவை தெற்கு தொகுதிக்குட்பட்ட கெம்பட்டி காலனியில் வாக்காளர்களுக்கு குறிப்பிட்ட கடையின் பெயர் அச்சிடப்பட்ட டோக்கன்களை விநியோகித்து வருகின்றனர். அதைக்காட்டிப் பணம் பெற்றுக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டு வருகிறது. இந்தச் சட்டத்துக்கு புறம்பான செயலால் அப்பகுதியில் அசாதாரண சூழல் நிலவுகிறது. பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன் ஆதரவாளர்கள்தான் இந்த டோக்கன்களை கொடுத்துவருவதாக தெரிகிறது. எனவே உரிய விசாரணை மேற்கொண்டு சட்டத்திற்கு புறம்பாக செயல்பட்ட பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனை தகுதி நீக்கம் செய்ய வேண்டும்” என்று புகாரில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்தப் புகார் பற்றி கமல்ஹாசன் கூறுகையில், “பணப்பட்டுவாடா நடந்தது பற்றியும் எங்கள் கட்சி பூத் ஏஜெண்ட்களுக்கு அனுமதி மறுத்தது தொடர்பாகவும் புகார் அளித்துள்ளோம். பணப்பட்டுவாடா நிறைய நடந்திருக்கிறது. டோக்கன்கள் யார் யாருக்கு வழங்கப்பட்டுள்ளது என்பதை முதலில் கண்டுபிடிக்க வேண்டும். இந்த செயல்கள் ஜனநாயகத்துக்கு எதிரானது. தோல்வி பயத்தில் உள்ளவர்கள் இப்படி பணப்பட்டுவாடா செய்கின்றனர். எல்லா இடத்திலும் பரவலாக பணப்பட்டுவாடா நடக்கிறது” என்று தெரிவித்தார்.