கர்நாடகாவில் 15 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால், மாநில முதல்வர் எடியூரப்பா அதிர்ச்சி அடைந்துள்ளார்.
கர்நாடகாவில் காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதாதள எம்.எல்.ஏ.க்கள் 17 பேர் ராஜினாமா செய்வதாக அறிவித்ததால், குமாரசாமி ஆட்சி கவிழ்ந்தது. இதனையடுத்து 106 உறுப்பினர்களைக் கொண்ட பாஜக ஒரு சுயேட்சை உறுப்பினர் ஆதரவுடன் பதவியேற்றது. முதல்வராக எடியூரப்பா பதவியேற்றுக்கொண்டார். பிறகு ராஜினாமா செய்வதாகக் கூறிய  17 பேரையும் சபாநாயகர்  தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டார். மெஜாரிட்டிக்கு 7 இடங்கள் குறைவு என்றபோதும், 17 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் சபை எண்ணிக்கை குறைந்ததால், பாஜக ஆட்சியில் உள்ளது.   
இந்த 17 பேரும் தகுதி நீக்கத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு  தொடர்ந்துள்ளனர். இதை, அவசர மனுவாக விசாரிக்க தகுதி நீக்க எம்.எல்.ஏ.,க்கள் தரப்பில் கோரப்பட்டது. ஆனால், அவசரமாக விசாரிக்க நீதிமன்றம் மறுத்துவிட்டது. இந்நிலையில், கர்நாடகத்தில் காலியாக உள்ள 17 தொகுதிகளில் 15 தொகுதிகளுக்கு தேர்தல் ஆணையம் இடைத்தேர்தலை அறிவித்துள்ளது.
தகுதி நீக்க வழக்கு முடிவுக்கு வந்த பிறகே, அந்த அடிப்படையில்தான் தேர்தல் நடைபெறும் என்று பாஜக எதிர்பார்த்தது. ஆனால், திடீரென இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டதால், தகுதி நீக்க எம்.எல்.ஏ.க்களும் ஆளும் பாஜகவினரும் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஒரு வேளை  தேர்தல் நடைபெறும்பட்சத்தில் பாஜக 7 தொகுதிகளில் வெற்றி பெற்றால்தான் ஆட்சியைத் தக்க வைக்க முடியும். இந்த வழக்கு முடிவுக்கு வரும்வரை இருக்கும் எண்ணிக்கையை வைத்து ஆட்சியை நடத்தலாம் என்று நினைத்த பாஜகவுக்கு தேர்தல் அறிவிப்பு கசப்பாக அமைந்துள்ளது. 
இதேபோல தகுதி நீக்க எம்.எல்.ஏ.க்கள் எப்படியும் உச்ச நீதிமன்றத்தில் தங்களுக்கு சாதகமாக தீர்ப்பு வந்தால், எம்.எல்.ஏ.வாக தொடர முடியும் என்று நினைத்திருந்தனர். ஆனால், தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால், பாஜக ஆட்சியமைக்க உதவி செய்த இந்த எம்.எல்.ஏ.க்களும் கடும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். இதனால், இடைத்தேர்தலுக்கு தடை கேட்டு உச்ச நீதிமன்றத்தை அணுக முடிவு செய்துள்ளனர்.
இந்நிலையில் இடைத்தேர்தல் குறித்து கர்நாடக தேர்தல் அதிகாரி சஞ்சீவ்குமார் கூறுகையில், “தகுதி நீக்கம் செய்யப்பட்ட 17 எம்எல்ஏக்கள் உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு இன்னும் விசாரணைக்கு வரவில்லை. 17 தொகுதிகளில் 2 எம்.எல்.ஏ.க்கள் மீதான தேர்தல் வழக்கு கர்நாடக உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. எனவே இந்த இரு தொகுதிகள் தவிர்த்து மற்ற 15 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. சட்டப்படி தகுதி நீக்கம் செய்யப்பட்டவர்கள் இத்தேர்தலில் போட்டியிட முடியாது” என்று தெரிவித்தார்.
இடைத்தேர்தல் அறிவிப்பால் தகுதி நீக்க எம்.எல்.ஏ.க்கள் மட்டுமல்லாமல், முதல்வர் எடியூரப்பாவும் கலக்கத்தில் உள்ளார். இந்த இடைத்தேர்தலுக்கு தடை கேட்டு உச்ச நீதிமன்றத்தை நாளை அணுக தகுதி நீக்க எம்.எல்.ஏ.க்கள் முடிவு செய்துள்ளனர். உச்ச நீதிமன்றத்தின் முடிவை பொறுத்தே கர்நாடகாவில் 15 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெறுமா இல்லையா என்பது தெரியவரும்.