எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் தொடர்பான தீர்ப்பு குறித்து கேட்ட போது டி.டி.வி தினகரன் ஒரு நிமிடம் தனது கூல் மனநிலையை விட்டு கோபப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. காலை 10.35 மணி அளவில் தீர்ப்பு வெளியானதும் தினகரன் அந்த தகவலை செய்தி தொலைக்காட்சிகளை பார்த்து தான் தெரிந்து கொண்டார். தீர்ப்பு குறித்த விவரங்களை கூட தனது வழக்கறிஞர்களிடம் கேட்காமல் நேராக செய்தியாளர்களை சந்தித்தார் தினகரன். 

செய்தியாளர்களிடம் பேசும் போது தீர்ப்பை பின்னடைவாக கருதவில்லை ஒரு அனுபவமாக கருதுவதாக தினகரன் கூறினார். ஆனால் தினகரன் முகத்தில் அப்போது சோகம் பீடித்திருந்தது. அதாவது எதிர்பார்த்த ஒன்று நடக்காத போது ஒருவர் முகம் எப்படி இருக்குமோ அப்படி இருந்தது. மேலும் கொடுத்த இது தான் நடக்கும் என்று சிலர் வாக்குறுதி அளித்த நிலையில் அது நடக்காத காரணத்தினால் ஏற்படும் மன உலைச்சலும் தினகரனிடம் காணப்பட்டது. வழக்கமாக செய்தியாளர் சந்திப்பை கலகலப்பாக மாற்றும் தினகரன் எப்போது செய்தியாளர் சந்திப்பை முடித்து விட்டு செல்லலாம் என்கிற ரீதியில் தான் பேசிக் கொண்டிருந்தார். 

இதற்கு காரணம் உச்சநீதிமன்றம் சென்றாலும் உடனடியாக தீர்ப்பு கிடைக்காது. மேலும் இடைத்தேர்தல் என்றாலும் கூட 20 தொகுதிகளிலும் கவனத்தை செலுத்த வேண்டும். 20 தொகுதிகளில் 9 தொகுதிகளில் வென்றால் கூட எடப்பாடி பழனிசாமி ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள முடியும். இதனால் ஏற்பட்ட சோகமே தினகரன் முகத்தில் செய்தியாளர் சந்திப்பின் போது தெரிந்தது. அதாவது தற்போதைய சூழலில் எடப்பாடி அரசை ஒன்றும் செய்ய முடியாது என்கிற விரக்தி அவரது பேச்சில் வெளிப்பட்டது. 

இதனை தொடர்ந்து வீட்டுக்குள் சென்ற தினகரன் செல்போனில் வழக்கறிஞர்களிடம் பேசியுள்ளார். அப்போது சற்று கோபமாகவே என்னிடம் என்ன கூறினீர்கள்? இப்போது என்ன நடந்துள்ள? என்று சீறியுள்ளார். அதற்கு இப்படி ஒரு தீர்ப்பை யாருமே எதிர்பார்க்கவில்லை என்று பதில் அளித்துள்ளனர். பின்னர் நிதானத்திற்கு வந்த தினகரன் அடுத்து என்ன செய்வது என்று யோசித்து கூறுங்கள் என்று வழக்கறிஞர்களிடம் கூறிவிட்டு போனை கட் செய்துள்ளார். அதன் பிறகு சிறிது நேரம் வெற்றிவேல் உள்ளிட்டோரிடம் பேசிவிட்டு தனது அறையில் தனிமையில் சிறிது நேரத்தை தினகரன் கழித்துள்ளார்.