தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏக்கள் 18 பேரும் சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிட முடியாது என்று அரசியல் அமைப்பு சட்டத்தை சுட்டிக்காட்டி சட்ட வல்லுனர்கள் தங்கள் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

கடந்த ஆண்டு தகுதி நீக்கத்திற்கு ஆளான எம்.எல்.ஏக்கள் 18 பேரும் உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கின் தீர்ப்பு அவர்களுக்கு எதிராகவே வந்தது. சபாநாயகர் எம்.எல்.ஏக்கள் 18 பேரை தகுதி நீக்கம் செய்தது செல்லும் என்று உயர்நீதிமன்றம் தெளிவாக கூறிவிட்டது. இதனால் தினகரன் ஆதரவாளர்கள் 18 பேரும் தங்கள் பதவிகளை இழந்துவிட்டனர். இந்த நிலையில் இடைத்தேர்தலில் நின்று தாங்கள் மீண்டும் எம்.எல்.ஏ ஆவோம் என்று தங்கதமிழ் செல்வன் கூறி வந்தார்.

 

ஆனால் மதுரையில் நடைபெற்ற தினகரனுடனான ஆலோசனைக்கு பிறகு பேசிய தங்கதமிழ்செல்வன் தீர்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளார். தாங்கள் இடைத்தேர்தலை எதிர்கொள்ள தயார் என்றும் ஆனால் ஏதேனும் காரணத்தை கூறி தங்களின் வேட்பு மனு நிராகரிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தங்கதமிழ்செல்வன் அச்சம் தெரிவித்தார். எனவே தான் உச்சநீதிமன்றம் சென்று தங்கள் எம்.எல்.ஏ பதவியை மீண்டும் பெற உள்ளதாகவும் தங்கதமிழ்செல்வன் கூறினார். 

உண்மையில் தீர்ப்பு வெளியானது முதலே இடைத்தேர்தல் நடைபெற்றால் 18 பேரும் போட்டியிட முடியுமா? முடியாதா? என்கிற ஒரு கேள்வி எழுந்தது. ஏனென்றால் கட்சித் தாவல் தடை சட்டத்தின் கீழ் 18 பேரையும் சபாநாயகர் தகுதி நீக்கம் செய்துள்ளார். கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் பதவி இழந்தவர்கள் உடனடியாக தேர்தலில் போட்டியிட முடியாது. இதனால் தான் ஒரு கட்சியில் எம்.எல்.ஏ., எம்.பியாக இருப்பவர்கள் வேறு கட்சிக்கு செல்லும் போது தங்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு செல்வார்கள். இதற்கு காரணம் ஒரு கட்சியின் சார்பில் தேர்தலில் வென்று கிடைத்த பதவியுடன் வேறொரு கட்சிக்கு சென்றால் அவர்களின் பதவி கட்சித் தாவல் தடைச் சட்டத்தில் பறிக்கப்படும்.

மேலும் அடுத்து வரும் தேர்தலிலும் பதவி இழந்தவர்கள் போட்டியிட முடியாத சூழல் ஏற்படும். இதன் காரணமாகவே வேறு கட்சிக்கு செல்லும் எம்.எல்.ஏ., எம்.பிக்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு சென்று பிறகு அதே தொகுதியில் வேறு கட்சி சார்பில் போட்டியிடுவார்கள். அந்த வகையில் தற்போது தமிழகத்தில் தினகரன் ஆதரவாளர்கள் 18 பேருமே கட்சித் தாவல் தடைச்சட்டத்தின் கீழ் தான் பதவி இழந்துள்ளனர். 

எனவே அவர்களால் இடைத்தேர்தலில் போட்டியிடவே முடியாது என்கிறார் உயர்நீதிமன்ற முன்னாள் நீதியரசர் சந்துரு. அரசியல் அமைப்புச் சட்டத்தின் பத்தாவது பட்டியலில் உள்ள பிரிவு 191 (2) ன் படி ஒரு மக்கள் பிரதிநிதி சபாநாயகரால் தகுதி நீக்கம் செய்யப்பட்டால் அந்த தகுதி நீக்கம் அந்த நாடாளுமன்றம் அல்லது சட்டமன்றத்தின் ஆயுட்காலம் முழுவதும் அமலில் இருக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளதாக நீதியரசர சந்துரு கூறுகிறார். அந்த வகையில் இடைத்தேர்தலில் போட்டியிட்டு தற்போதைய சட்டமன்றத்திற்கு 18 பேரும் மீண்டும் எம்.எல்.ஏக்களாக செல்ல முடியாது. வேட்பு மனு தாக்கலின் போதே 18 பேரின் மனுக்களும் தள்ளுபடி செய்யப்படும். 

இதே கருத்தையே உச்சநீதிமன்ற நீதிபதி மார்கண்டேய கட்ஜூவும் தெரிவிக்கிறார். தகுதி நீக்கத்திற்கு ஆளானவர்கள் இடைத்தேர்தலில் போட்டியிட சட்டம் அனுமதிக்காது என்று கட்ஜூ தெரிவித்துள்ளார். அதே சமயம் நாடாளுமன்ற மக்களவை முன்னாள் பொதுச் செயலாளர் சுபாஷ் காஷ்யப், தகுதி நீக்கத்திற்கு ஆளான எம்.எல்.ஏ அல்லது எம்.பி., வேறு ஒரு கட்சி சின்னத்தில் போட்டியிடலாம் என்று தெரிவித்துள்ளார். ஆனால் இதனை சட்ட வல்லுனர்கள் மறுத்துள்ளனர். தகுதி நீக்கம் செய்யப்பட்டவர்கள் ஏற்கனவே தாங்கள் சார்ந்திருந்த கட்சியின் மூலமாக வேண்டுமானால் போட்டியிட சட்டத்தில் இடம் இருக்கலாம் என்று அவர்கள் தெரிவிக்கின்றனர். 

அந்த வகையில் பார்த்தால் தினகரன் ஆதரவாளர்கள் 18 பேரும் மீண்டும் தேர்தலில் போட்டியிட வேண்டும் என்றால் அவர்களுக்கு இரட்டை இலை சின்னம் கிடைக்க வேண்டும் என்று ஒரு சிலர் கூறுகின்றனர். எது எப்படியோ இடைத்தேர்தலில் போட்டியிட முடியாது என்பதை அறிந்து தான் தினகரன் ஆதரவு தகுதி நீக்க எம்.எல்.ஏக்கள் மேல்முறையீடு எனும் முடிவை எடுத்துள்ளது தற்போது தெரியவந்துள்ளது.