பொதுமக்களுக்கு பயன்படுத்தப்படும் கிணறுகளில் தண்ணீரை திருட்டுத்தனமாக எடுத்து விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

தமிழகத்தில் கடும் வறட்சி நிலவி வருகிறது. தண்ணீருக்காக மக்கள் பல கிலோ மீட்டர் தூரத்துக்கு காலி குடங்களுடன் சென்று, அலைந்து திரிகின்றனர். ஆனால், அவர்களுக்கு அரை குடம் தண்ணீர் அல்ல அரை லிட்டர் தண்ணீர் கிடைப்பதே அரிதாக உள்ளது. 

இந்நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், கூறியதாவது. குடிநீர் பிரச்சனை என்பது, மக்களுக்கு மட்டுமில்லை. எங்களுக்கும் இருக்கிறது. ஒரு லாரியில் தண்ணீர் கொண்டு வருவதற்கு, ரூ.5 வரை செலவு செய்கிறார்கள். அதற்கு காரணம், மக்களிடம் ஒற்றுமை இல்லை. தங்களுக்கு கிடைக்கும் தண்ணீரை மற்றவர்களுக்கும், பிரித்து கொடுக்கும் பழக்கம் அவர்களுக்கு இல்லை.

 

ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் 40 குடும்பங்கள் வசிக்கின்றன. அவர்களின் தேவைக்கு தனித்தனியாக லாரியில் தண்ணீரை வரவழைக்கிறார்கள். இதனால், தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டு, லாரி டிரைவர்கள் பணத்தை கூடுதலாக கேட்கின்றனர். அதே தண்ணீரை, அனைத்து குடும்பத்தினரும் சேர்ந்து வாங்கினால், பணமும் குறையும். அதே நேரத்தில் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தினால், தேவையும் குறையும். தற்போது, குடிநீர் லாரிகள் பற்றாக்குறையாக உள்ளது. குறைந்த அளவில் இயக்கப்படும் லாரிகளை வைத்து, பொதுமக்களுக்கு குடிநீர் வழங்கி வருகிறோம். அதற்கான ஏற்பாடுகளை அரசு செய்து வருகிறது. 

சுத்திகரிக்கப்படாத தண்ணீரை பிடித்து கேன்களில் விற்கப்படுவதாக புகார்கள் வருகின்றன. இதுபோன்று தண்ணீரை சுத்திகரிப்பு செய்யும் நிறுவனங்களை, அதிகாரிகளை கொண்டு ஆய்வு செய்து, தண்ணீரை பரிசோதனை செய்த பிறகே அந்த நிறுவனத்துக்கு உரிமம் வழங்குகிறோம். இதுபோன்று தரமில்லாமல் தண்ணீர் விற்பனை செய்வது தெரியவந்தால், அதுபற்றி பொதுமக்கள் புகார் செய்தால், சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

நான் நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்து கொண்டபோது, ஏற்கனவே ஜெயலலிதா அறிவித்த, மழைநீர் சேகரிப்பு திட்டத்தை பற்றி பேசினேன். அதை, நாடு முழுவதும் செயல்படுத்த வேண்டும் என மத்திய அரசிடம், கோரிக்கை வைத்தேன். அதை செயல்படுத்துவதாக தெரிவித்ததனர். இதுபோன்ற திட்டத்தை செயல்படுத்தினால், நாடு முழுவதும் உள்ள தண்ணீர் பஞ்சத்தை தீர்க்க முடியும். 

தற்போது, தண்ணீர் பிரச்சனையை தீர்க்க அரசு உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது. அதிகாரிகளும் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். சென்னைக்கு தேவையான முக்கிய 4 ஏரிகளும் வறண்டுவிட்டன. ஆனாலும், மக்களுக்கு தேவையான குடிநீரை வழங்குவதில் முனைப்புடன் செயல்படுகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.