ஆசிரியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் தமிழகத்தில் பெரும்பாலான பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. இதனால் பள்ளிக்கல்வித்துறை சார்பாக பல்வேறு ஆணைகள் பிறப்பிக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் மற்றொரு முக்கிய முடிவை எடுத்துள்ளார் பள்ளிக்கல்விதுறை அமைச்சர் செங்கோட்டையன்.  

பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்பட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்- ஆசிரியர்கள் கூட்டமைப்பான ஜாக்டோ- ஜியோ சார்பில் காலவரையற்ற வேலைநிறுத்தம் நடந்து வருகிறது. தமிழகத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சுமார் 13 லட்சம் பேர் உள்ளனர். இவர்களில் 8 லட்சம் பேர் காலவரையற்ற போராட்டத்தில் குதித்துள்ளனர். இதனால் அரசு அலுவலகங்கள், பள்ளிகளில் வழக்கமான பணிகள் முடங்கியுள்ளன.

போராட்டத்தை கைவிடுமாறு ஜாக்டோ-ஜியோவுக்கு அமைச்சர் செங்கோட்டையன் பல தடவை கோரிக்கை விடுத்தார். ஆனால் ஏற்கப்படவில்லை. இதற்கிடையே போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஆசிரியர்களுக்கு பதிலாக தற்காலிக ஆசிரியர்களை தேர்வு செய்து நியமனம் செய்ய பள்ளிக் கல்வித்துறைச் செயலாளர் பிரதீப் யாதவ் அரசாணை வெளியிட்டுள்ளார். இதனை தொடர்ந்து பள்ளி கல்வி இயக்குனரகம் மற்றொரு எச்சரிக்கை அறிக்கையை வெளியிட்டுள்ளது.

அதில், 'பள்ளி கல்வித் துறையில், தற்காலிகமாக பணியாற்றுபவர்கள், போராட்டத்தில் பங்கேற்பது தெரிய வந்தால், அவர்கள் உடனடியாக பணிநீக்கம் செய்யப்படுவர்' என, தெரிவிக்கப்பட்டு உள்ளது.