நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் அறிவிப்பு குறித்து முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் விமர்சனம் செய்துள்ளார். 

பிரதமர் மோடி அறிவித்த 20 லட்சம் கோடி ரூபாய்க்கான பொருளாதார சிறப்பு திட்டங்கள் எவை என்பது குறித்த விரிவான விவரங்களை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று வெளியிட்டார். அதில் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் உள்பட பல்வேறு துறைகள் பலன் அடையும் விதமாக பல லட்ச கோடி ரூபாய் மதிப்பில் பல சலுகைகள் அறிவிக்கப்பட்டன.

இந்நிலையில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் அறிவிப்பு குறித்து முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் கருத்து தெரிவித்துள்ளார். அதில், சிறு தொழில் நிறுவனங்களுக்கு அடமானம் இல்லாமல் 3 லட்சம் கோடி கடன் வழங்கப்படும் என மத்திய நிதியமைச்சர் அறிவித்தார். மீதமுள்ள 16.4 லட்சம் கோடி எங்கே சென்றது என்று கேள்வி எழுப்பினார்.

சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு சுமாரான தொகுப்பைத் தவிர மத்திய அரசின் அறிவிப்புகள் ஏமாற்றம் அளிப்பவையாக உள்ளதாகக் குறிப்பிட்ட சிதம்பரம், லட்சக்கணக்கான புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பசி, பட்டினியுடன் நடந்து சென்றனர். பல ஆயிரக்கணக்கானோர் தங்கள் சொந்த மாநிலங்களுக்குத் திரும்பிச் செல்கிறார்கள். அவர்களுக்கு நிதியமைச்சர் கூறியதில் எதுவும் இல்லை. தினமும் உழைப்பவர்களுக்கு இது கொடூரமான அடியாகும் என்றார்.

மக்கள் தொகையில் பாதிக்கும் மேற்பட்டவர்களுக்குப் பணப் பரிமாற்றத்தின் மூலம் எவ்வித பலனும் ஏற்படப் போவதில்லை என்றும், 13 கோடி குடும்பங்கள் வறுமையில் தள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவித்த சிதம்பரம், ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ.5,000 வழங்கினால் அரசுக்கு ரூ.65,000 கோடி மட்டுமே செலவாகும். மக்கள் தொகையில் 13 கோடி குடும்பங்களின் கைகளில் பணத்தை வைப்பதே அரசாங்கம் செய்ய வேண்டிய முதல் விஷயம் என்றார்.

சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு ஆதரவாக சில நடவடிக்கைகளை நிதியமைச்சர் அறிவித்துள்ளார். ஆனால், இந்த ஆதரவு நடவடிக்கைகள் மிகப்பெரிய அளவில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்களை மேற்கொள்ளும் சுமார் 45 லட்சம் நிறுவனங்களுக்கு மட்டுமே சாதகமாக அமையும். ஆனால், இது தவிர பெருமளவிலான மொத்தம் 6.3 கோடி எண்ணிக்கையை கொண்ட சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் கைவிடப்பட்டு தளர்வடைந்து விடும் என நினைக்கிறேன் என்று கூறியுள்ளார்.