கடவுளின் குழந்தைகளான மாற்றுத் திறனாளிகளை அழைத்துப் பேசி அவர்களது கோரிக்கைகளை நிறைவேற்றித் தர நினைக்காமல் மனசாட்சியின்றி காவல் துறையை வைத்து அவர்களை அலைக்கழிப்பது சரியானதா? என டிடிவி.தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
உதவித்தொகையை உயர்த்திகேட்டு போராடுவதற்காகச் சென்னை வந்த மாற்றுத் திறனாளிகளை பல இடங்களில் தடுத்து நிறுத்தி, கைது செய்வதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது என டிடிவி.தினகரன் கூறியுள்ளார்.
மாற்றுத்திறனாளிகள் போராட்டம்
மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு சார்பில் வழங்கப்படும் உதவி தொகையினை உயர்த்தி வழங்கக் கோரி தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் இன்று சென்னையில் உள்ள தலைமை செயலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால், போலீசாருக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கும் இடையே சிறிது தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இந்நிலையில், போராட்டம் காரணமாக மாற்றுத்திறனாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் பல ஊர்களில் இருந்து சென்னை புறப்பட்ட மாற்றுத்திறனாளிகளை தடுத்து நிறுத்தப்பட்டு காவல்துறையினர் கைது செய்ததாகவும் கூறப்படுகிறது. இதற்கு டிடிவி.தினகரன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

டிடிவி.தினகரன் கண்டனம்
இதுதொடர்பாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்;- உதவித்தொகையை உயர்த்திகேட்டு போராடுவதற்காகச் சென்னை வந்த மாற்றுத் திறனாளிகளை பல இடங்களில் தடுத்து நிறுத்தி, கைது செய்வதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது. தி.மு.க.அரசின் இந்த நடவடிக்கைக்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

கடவுளின் குழந்தைகள்
கடவுளின் குழந்தைகளான மாற்றுத் திறனாளிகளை அழைத்துப் பேசி அவர்களது கோரிக்கைகளை நிறைவேற்றித் தர நினைக்காமல் மனசாட்சியின்றி காவல் துறையை வைத்து அவர்களை அலைக்கழிப்பது சரியானதா? என டிடிவி.தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
