Asianet News TamilAsianet News Tamil

நிதி நிறுவனம் கொடுத்த அழுத்தம்.. மாற்றுத்திறனாளி விவசாயி தற்கொலை.. கொதிக்கும் ராமதாஸ்..!

கடன் கொடுத்துவிட்டு அடியாட்களை அனுப்பி மிரட்டுவது, கடன் பெற்றவர்களைத் தரக்குறைவாகப் பேசி அவமானப்படுத்துவது ஆகியவற்றைத் தனியார் நிறுவனங்கள் வழக்கமாகக் கொண்டிருப்பதுதான் தற்கொலைகளுக்குக் காரணமாகும்.

Disabled farmer commits suicide .. Ramadoss condemned
Author
Tamil Nadu, First Published Sep 25, 2021, 1:54 PM IST

மாற்றுத்திறனாளி விவசாயி மனோகரனின் தற்கொலைக்குக் காரணமாகத் தனியார் நிதி நிறுவன அதிகாரிகள் கைது செய்யப்பட்டு, அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்;- காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அருகே வேளாண் கடன் தவணையைச் செலுத்தத் தவறியதற்காகத் தனியார் நிதி நிறுவன அதிகாரிகள் தரக்குறைவாகப் பேசியதைத் தாங்கிக்கொள்ள முடியாத மாற்றுத்திறனாளி விவசாயி நஞ்சு குடித்து தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். வருமானம் இல்லாமல் வாடிய விவசாயியைத் தனியார் நிதி நிறுவன அதிகாரிகள் அவமானப்படுத்தி, தற்கொலைக்குத் தூண்டியது கண்டிக்கத்தக்கதாகும்.

Disabled farmer commits suicide .. Ramadoss condemned

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அருகே வில்லிவலம் கிராமத்தைச் சேர்ந்த மனோகரன் என்ற மாற்றுத்திறன் விவசாயி அவரது உறவினர் ராமகிருஷ்ணன் பெயரில் தனியார் நிதி நிறுவனத்திடம் டிராக்டர் வாங்குவதற்காக ரூ. 2 லட்சத்து 11,734 கடன் வாங்கியுள்ளார். அதில், ரூ.43,380 கடன் நிலுவை உள்ளது. கொரோனா பரவல் காரணமாக மனோகரனுக்குப் போதிய வருவாய் இல்லாததால் கடன் நிலுவைத் தொகையைச் சரியாகச் செலுத்தவில்லை என்று கூறப்படுகிறது. அதனால், தனியார் நிதி நிறுவனத்தைச் சேர்ந்த ஊழியர்கள் மனோகரனின் வீட்டுக்குச் சென்று மரியாதைக் குறைவாகப் பேசியுள்ளனர். கடன் தவணையைச் செலுத்தக் கால அவகாசம் வழங்கும்படி அவர் விடுத்த வேண்டுகோளை தனியார் நிதி நிறுவனம் ஏற்றுக்கொள்ளவில்லை.

மாறாக, கடன் தவணையைச் செலுத்தாததற்காக டிராக்டரைப் பறிமுதல் செய்வது மட்டுமின்றி, வீட்டையும் ஜப்தி செய்வோம் என்று தனியார் நிதி நிறுவன அதிகாரிகள் மிரட்டியுள்ளனர். இது தொடர்பாக, வாலாஜாபாத் காவல் நிலையத்தில் நேற்று முன்நாள் புகார் அளித்த மனோகரன், கடன் தவணையைச் செலுத்த அவகாசம் கேட்பதற்காக காஞ்சிபுரம் மாவட்டம் நசரத்பேட்டையில் உள்ள தனியார் நிதி நிறுவனத்துக்குச் சென்றுள்ளார். ஆனால், அவருக்கு கடன் தவணை செலுத்த கூடுதல் அவகாசம் அளிக்க மறுத்துவிட்ட அதன் அதிகாரிகள், அங்கும் மனோகரனைத் தகாத வார்த்தைகளால் திட்டியதாகக் கூறப்படுகிறது. அதனால் மனவேதனையடைந்த மனோகரன், தனியார் நிதி நிறுவன வாசலிலேயே நஞ்சு குடித்து சுருண்டு விழுந்தார். அவரை உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டுசென்று சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும் பயனின்றி நேற்று உயிரிழந்துவிட்டார்.

Disabled farmer commits suicide .. Ramadoss condemned

டிராக்டர் வாங்குவதற்காக வேளாண் கடனை 2019-ம் ஆண்டில் வாங்கிய மனோகரன், அப்போது முதல் கடன் தவணையைச் சரியாகச் செலுத்தி வந்துள்ளார். கொரோனா பாதிப்பு காரணமாக வருவாய் இழப்பு ஏற்பட்டதால்தான் அவரால் கடன் தவணையைச் செலுத்த முடியவில்லை. அதை அவர் நேர்மையாக ஒப்புக்கொண்டு கூடுதல் அவகாசம் கேட்டிருக்கிறார். கொரோனா பாதிப்பால் கடன் தவணை செலுத்த முடியாதவர்களுக்குக் குறைந்தது 6 மாத அவகாசம் வழங்கும்படி உச்ச நீதிமன்றமே அறிவுறுத்தியுள்ளது. சட்டங்களையும், விதிகளையும் மதித்து மனோகர் கடன் தவணை செலுத்த அவகாசம் அளிக்கப்பட்டிருந்தால் அவர் உயிரிழந்திருக்க மாட்டார்.

கடன் தவணையை மனோகரனால் செலுத்த முடியவில்லை என்றால் கூட, அதற்காக அபராதமோ, கூடுதல் வட்டியோ வசூலிக்கலாமே தவிர, வாகனத்தைப் பறிமுதல் செய்யவோ, அவரைத் தகாத வார்த்தைகளால் திட்டவோ தனியார் நிதி நிறுவனங்களுக்கு எந்த அதிகாரமும் இல்லை. உச்ச நீதிமன்றமும், உயர் நீதிமன்றங்களும் வழங்கிய பல தீர்ப்புகளில் இது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. அவ்வாறு இருக்கும்போது மனோகரனைக் கடுமையாகத் திட்டியதன் மூலம் அவர் தற்கொலை செய்வதற்குத் தனியார் நிதி நிறுவன அதிகாரிகள் தூண்டியுள்ளனர். மனோகரனின் தற்கொலைக்குக் காரணமாக இருந்த அவர்கள் கண்டிப்பாக தண்டிக்கப்பட வேண்டும்.

கடந்த சில ஆண்டுகளில் தனியார் நிதி நிறுவனங்களின் அதிகாரிகள் இழைத்த கொடுமைகள் மற்றும் அவமானங்கள் காரணமாக, தமிழகத்தின் நெற்களஞ்சியம் என்று போற்றப்படும் தஞ்சாவூரில் தொடங்கி மாநிலம் முழுவதும் ஏராளமான விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். கடன் கொடுத்துவிட்டு அடியாட்களை அனுப்பி மிரட்டுவது, கடன் பெற்றவர்களைத் தரக்குறைவாகப் பேசி அவமானப்படுத்துவது ஆகியவற்றைத் தனியார் நிறுவனங்கள் வழக்கமாகக் கொண்டிருப்பதுதான் தற்கொலைகளுக்குக் காரணமாகும்.

Disabled farmer commits suicide .. Ramadoss condemned

தனியார் நிதி நிறுவனங்கள் அளிக்கும் நெருக்கடிகள், இழைக்கும் அவமானங்கள் காரணமாக இனியும் ஒரு விவசாயி கூட தற்கொலை செய்துகொள்ளக் கூடாது என்ற நிலை உருவாக்கப்பட வேண்டும். அதற்கேற்ற வகையில் தனியார் நிதி நிறுவனங்கள் முறைப்படுத்தப்பட வேண்டும். மாற்றுத்திறனாளி விவசாயி மனோகரனின் தற்கொலைக்குக் காரணமாகத் தனியார் நிதி நிறுவன அதிகாரிகள் கைது செய்யப்பட்டு, அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும். தற்கொலை செய்துகொண்ட மாற்றுத்திறன் விவசாயி மனோகரனின் குடும்பத்துக்கு தமிழக அரசு ரூ.1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என
ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios