தமிழக விவசாயிகளுக்காக சென்னை கத்திப்பாரா மேம்பாலத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட இயக்குநர் கவுதமனை தேச விரோத சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என்று பா.ஜ.க.மூத்த தலைவர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார். 

வறட்சி நிவாரணம், பயிர்க்கடன் காப்பீடு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தலைநகர் டெல்லியில் தமிழக விவசாயிகள் கடந்த 20 நாட்களுக்கும் மேலாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

இவர்களுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் மாணவர்கள், இளைஞர்கள், கட்சி சாராத பொதுமக்கள் என பல தரப்பினும் போராட்டத்தில் ஈடுபட்டு விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். 

இந்த வரிசையில் திரைப்பட இயக்குநர் கவுதமன் சென்னை கத்திப்பாரா மேம்பாலத்தில் போராட்டத்தில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டார். இதற்கிடையே விவசாயிகளுக்காக போராட்டம் நடத்திய கவுதமனை தேசிய விரோதச் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என்று ஹெச்.ராஜா வலியுறுத்தி உள்ளார். போராட்டத்திற்கு அவருக்கு எங்கிருந்து நிதி வருகிறது என்பதை அறிய விசாரணை நடத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தி உள்ளார்.