வரும் நாடாளுமன்றத் தேர்தலில் யாருக்கு ஆதரவு என்பது பற்றி நடிகர் விஜயின் தந்தை இயக்குநர் சந்திரசேகர் கருத்து தெரிவித்திருக்கிறார்.

2011 சட்டப்பேரவைத் தேர்தலில் ஜெயலலிதாவைச் சந்தித்து அதிமுகவுக்கு ஆதரவு கொடுத்தார் நடிகர் விஜய். அப்போது முதலே தேர்தலில் நடிகர் விஜயின் ஆதரவு யாருக்கு என்பது பற்றி கேள்வி எழுவது வாடிக்கை. அவ்வப்போது நிலவும் அரசியல் தட்பவெப்பத்தைப் பொறுத்து விஜய் ரசிகர்கள் வாக்களித்துவருகிறார்கள். அண்மைக்காலமாக விஜயுடன் மோதல் போக்கைக் கடைபிடித்துவருகின்றன பாஜக, அதிமுக கட்சிகள். இதனால், வரும் தேர்தலில் நடிகர் விஜயின் ஆதரவு எந்தக் கட்சிக்குக் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

 இந்நிலையில் நெல்லை மாவட்டம் பணகுடி அருகே  நடிகர் விஜயின் தந்தையும் திரைப்பட இயக்குனருமான எஸ்.ஏ.சந்திரசேகர் இதுபற்றி செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்திருக்கிறார். அவர் கூறும்போது, “தற்போதைய நிலையில் யார் நல்லவர்கள், யார் கெட்டவர்கள் என்றே கணிக்க முடியவில்லை. யார் வந்தால் நன்றாக இருக்கும் என்றுகூட புரிந்துகொள்ள முடியவில்லை. சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் நாட்கள் இருக்கின்றன. அதற்குள் மக்கள் தெளிவாகி ஓட்டு போடுவார்கள் என்று நினைக்கிறேன்.

ஆனால், நாடாளுமன்ற தேர்தலில் தமிழர்களின் உணர்வு என்ன என்று பார்த்தால், மோடி மீண்டும் ஆட்சிக்கு வரக் கூடாது என்பதுதான். அதில் மக்கள் தெளிவாக இருக்கிறார்கள். தாழ்த்தப்பட்டவர்கள், சிறுபான்மையினர்மிகவும் பயந்துகொண்டிருக்கிறார்கள்.  நாடாளுமன்ற தேர்தலில் விஜயின் மக்கள் இயக்கம் யாருக்கு ஆதரவு என்று கேட்கிறார்கள். அதை விஜயிடம்தான் கேட்க வேண்டும்.

யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். இவர்தான் அரசியலுக்கு வர வேண்டும் என யாருக்கும் பட்டயம் தீட்டி கொடுக்கவில்லை. சமூகத்துக்கு நல்லது செய்பவர்கள் யாராக இருந்தாலும் அரசியலுக்கு நிச்சயம் வரலாம். சினிமா நடிகரால் முடியும் என்றால் வரட்டுமே.

வாக்காளர் இந்திரத்தில் ஒப்புகைச்சீட்டு என்பது நல்ல வி‌ஷயம்.  நாம் யாருக்கு ஓட்டு போட்டோம் என்று வாக்காளர்களுக்கு முன்பு தெரியாமல் இருந்தது. தற்போது ஒப்புகைச்சீட்டு தர உள்ளது வரவேற்கத்தக்கது. வாக்காளர்களுக்கும் திருப்தி ஏற்படும்” என்று தெரிவித்தார்.

மோடிக்கு எதிராக சந்திரசேகர் கருத்து தெரிவித்திருப்பதால், அந்தக் கட்சி இடம்பெறும் கூட்டணிக்கு எதிராக விஜய் ரசிகர்கள் வாக்களிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.