Director and actror bhakyaraj comments against MK Stalin
மிக சிறந்த திரைக்கதை எழுத்தாளர்! என்று பாலிவுட் ஆளுமைகளாலே போற்றப்பட்டவர் பாக்யராஜ். தீவிர சினிமாவிலிருந்து ஒதுங்கியவர், தீவிர அரசியலுக்கு முயற்சி தோல்வியுற்று கரை ஒதுங்கினார். இந்நிலையில் மீண்டும் அ.தி.மு.க.வில் இணைந்து பணியாற்றும் முடிவை எடுத்திருக்கிறார்.
இடையில் சில காலம் தி.மு.க.வுக்கு போய் வந்திருந்தவர்தான் பாக்யராஜ். ஆனாலும் அதை தூக்கி குப்பையில் போட்டுவிட்டு ஆளுங்கட்சியில் ஐக்கியமாகும் கெத்தில் ஸ்டாலினை சீண்டியிருக்கிறார் இப்படி...
“தி.மு.க.வின் தற்போதைய நிலை பரிதாபகரமாக இருக்கிறது. ஸ்டாலினுக்கு செயல் தலைவர் பதவி கொடுத்ததைத் தவிர அங்கு வேறு என்ன நடந்தது சொல்வதற்கு? இதை நான் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை வைத்து சொல்லவில்லை.

ராஜிவ்காந்தி கொலைக்குப் பின்பு நடந்த சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. வாஷ் அவுட் ஆனது. இப்போது இ.பி.எஸ். ஓ.பி.எஸ். மற்றும் டி.டி.வி. என இவர்களுக்குள் உண்டான பிரச்னையில் தி.மு.க. காணாமல் போய்விட்டதுதான் அதிர்ச்சியே.
நமக்கான வாக்குகள் நமக்கே கிடைத்துவிடும் என்ற மிதப்பில் தி.மு.க.வினர் இருந்தனர். ஆனால் பாரம்பரியமாக அக்கட்சிக்கு இருந்த வாக்குகளும் போனதுதான் மிச்சம்.” என்று நறுக்கென பேசி தள்ளியிருக்கிறார்.

அதேபோல் “ரஜினி அரசியலுக்கு வருவது தவறில்லை. ஆனால் மக்களின் கேள்விகளுக்கும், மீடியாக்களின் கேள்விகளுக்கும் பதிலளிக்கும் வகையில் தயாராக வரவேண்டும். கேள்விகளைக் கண்டு ஓடக்கூடாது. ரஜினியைப் பார்த்து ‘தமிழரா? காவிரி பிரச்னை பற்றி என்ன நினைக்கிறீர்கள்?’ என்றெல்லாம் கேள்வி கேட்பார்கள். எல்லாவற்றையும் சந்திக்க வேண்டும். சினிமா போல அல்ல அரசியல், இது கத்தி மீது நடப்பது போன்றது.” என்று வகுப்பெடுத்துள்ளார்.
ஆனாலும் ஸ்டாலின் பற்றி பாக்யராஜ் கூறியிருப்பவரை தி.மு.க.வினரை அநியாயத்துக்கு டென்ஷனாக்கியுள்ளன.
