இந்தியா 1947ம் ஆண்டு முதல் 2014வரை சுதந்திர இந்தியாவாக இருந்தது. ஆனால், தற்போது சர்வாதிகார இந்தியாவாக மாறிவிட்டது என்று இயக்குநர் அமீர் தெரிவித்துள்ளார்.
திரைப்பட இயக்குனர்கள் வெற்றிமாறன், அமீர், மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி ஆகியோர் கூட்டாக இன்று செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது டெல்லி கலவரம் தொடர்பாக அவர்கள் பேட்டி அளித்தனர். இந்தச் சந்திப்புக் கூட்டத்தில் இயக்குநர் அமீர் பேசுகையில், “இந்தியா 1947ம் ஆண்டு முதல் 2014வரை சுதந்திர இந்தியாவாக இருந்தது. ஆனால், தற்போது சர்வாதிகார இந்தியாவாக மாறிவிட்டது. மத ரீதியாகச் செயல்படும் அரசாக தமிழக அரசு இருப்பதும் வேதனை அளிக்கிறது. ட்ரம்ப் இந்தியா வந்தபோது வன்முறை நடந்துள்ளது.


மசூதிகள் மீது திட்டமிட்டு தாக்குதல் நடந்துள்ளது. வன்முறை செய்ய நினைப்பவர்கள் வன்முறை நடைபெறும் எனச் சொல்லியே வன்முறையில் ஈடுபடுகிறார்கள். அரசு கொண்டுவந்த சட்டத்துக்கு எதிராகப் போராட மக்களுக்கு உரிமை உள்ளது. இந்தப் போராட்டங்களை எதிர்க்கட்சிகள் தூண்டிவிடுவதாகக் கூறுகிறார்கள். இந்தச் சட்டத்துக்கு எதிராக ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அங்கே எதிர்கட்சிகளா தூண்டிவிட்டன? கேரளாவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் காரணம் எனச் சொல்வீர்களா? 


வண்ணாரப்பேட்டையிலும் கலவரம் நடக்கும் எனச் சிலர் சொல்கிறார்கள். அதுபோல் தமிழகத்தில் நடைபெறக் கூடாது. வண்ணாரப்பேட்டையில் போராடிவரும் முதல்வர், துணை முதல்வர் ஆகியோர் மக்களைச் சந்தித்து பேச மறுக்கிறார்கள். என்.ஆர்.சி., என்.பி.ஆரை அனுமதிக்க மாட்டோம் என முதல்வர் உறுதி அளித்தால் மட்டுமே அங்கே போராடிவரும் மக்கள் தங்களின் போராட்டத்தை வாபஸ் பெறுவார்கள்” என அமீர் தெரிவித்தார்.