திருவண்ணாமலை மாவட்டத்திலிருந்து செய்யாறைத் தலைமையிடமாகக் கொண்டு தனி மாவட்டம் அமைக்குமாறு திராவிடர் கழகத் தலைவர்  ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு: 

செய்யாறு - வடாற்காடு மாவட்டத்தில் மிக முக்கியமான நகரமாகும். திருவத்திபுரம் - செய்யாறு இரண்டையும் இரட்டை நகரம் என்று சொல்வதுண்டு.தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் அண்மையில் மேலும் புதிய மாவட்டங்கள் உருவாக்கப்படும் என்று அறிவித்துள்ளார்.அந்த அடிப்படையில் திருவண்ணாமலை மாவட்டத்திலிருந்து பிரித்து செய்யாறைத் தலைமையிடமாகக் கொண்டு செய்யாறு மாவட்டம் உருவாக்கிடுவது பொருத்தமாக இருக்கும். 10.70 லட்சம் மக்கள் வசிக்கக்கூடிய 2288.06 சதுர கி.மீ. பரப்பளவு கொண்டதாகும் செய்யாறு. அய்ந்து தாலுகாக்கள் இதன் உள்ளடக்கமாகும்.

கிட்டத்தட்ட 60 அரசுத் துறை அலுவலகங்கள் இந்த மாவட்டத்தில் அடங்கக்கூடியவையாகும். இப்பொழுது திருவண்ணாமலையில் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்திற்குச் செல்ல வேண்டுமென்றால், கிட்டத்தட்ட 150 கி.மீட்டர் பயணிக்கவேண்டிய குக்கிராமங்களும் இந்த மாவட்டத்தில் உள்ளன. எல்லா வகைகளிலும் தலைமையிடமாகக் கொண்டு மாவட்டம் அமைத்திட செய்யாறு மிகப்பொருத்தமான நகரமாகும்.இவை எல்லாவற்றையும்விட 2011 ஆம் ஆண்டில் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பங்கேற்ற அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், மேனாள் தமிழக முதலமைச்சருமான செல்வி ஜெ.ஜெயலலிதா அவர்கள் திருவண்ணாமலை மாவட்டத்தினை மறுசீரமைப்புச் செய்து செய்யாறைத் தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் அமைக்கப்படும் என்று அறிவித்துள்ளார் என்பதையும் முக்கியமாகக் கவனத்திலும், கருத்திலும் எடுத்துக்கொண்டு,

செய்யாறை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டத்தை அமைப்பது அவசியமாகும்.செய்யாறு பகுதிவாழ் மக்கள் சார்பாக இந்தக் கோரிக்கையினை மாண்புமிகு முதலமைச்சருக்குத் திராவிடர் கழகம் முன்வைக்கிறது - ஆவன செய்யவேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறோம். -என வலியுறுத்தியுள்ளார்.