தமிழக முதலமைச்சர் எடப்பாடி  பழனிசாமி வெளிநாட்டு  முதலீடுகளை ஈர்ப்பதற்காக இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் துபாய் போன்ற நாடுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். தற்போது லண்டனில் உள்ள அவர் பல ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளார்.

இதே போல் கல்வித்துறையில் பல மாற்றங்களை செய்யும் பொருட்டு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பின்லாந்து உள்ளிட்ட பல நாடுகளுக்கு அரசு முறைப் பயணமாக சென்றுள்ளார்.

இந்நிலையில் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் இந்தோனேசியா புறப்பட்டுச் சென்றார். இதைத் தொடர்ந்து சிங்கப்பூர், தாய்லாந்து, இந்தோனேசியா ஆகிய நாடுகளுக்கும் அமைச்சர் பயணம் மேற்கொள்கிறார்.

அந்த நாடுகளில் உள்ள சரணாலயங்கள், வன உயிரின பூங்காக்கள் ஆகியவற்றையும் அவர் பார்வையிடுகிறார். அந்த நாடுகளில் வனத்துறையில் பின்பற்றப்படும் முறைகள், காட்டுத்தீ ஏற்பட்டால் அதை அணைப்பதற்கு எடுக்கப்படும் முயற்சிகள் போன்றவை தமிழகத்திலும் நடைமுறைப்படுத்த திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. 

இந்த பயணத்தினால் சென்னையில் உள்ள வண்டலூர் உயிரியல் பூங்காவின் தரத்தை உலகத்தரம் வாய்ந்ததாக மாற்றுவதற்கான மேம்பாட்டுப் பணிகளை அறிந்துகொள்ள உதவும் என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.