வருத்தத்துடன் இருக்கும் இரு அணியினரையும் ஒருங்கிணைப்போம்…திண்டுக்கல் சீனிவாசன் பேட்டி…

இரு அணிகள் இணைப்பு குறித்து எந்தவித முடிவும் எடுக்கமுடியாத நிலையில் விரைவில் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

இரட்டை இலை தொடர்பான வழக்கில் டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த டி.டி.வி.தினகரன், ஜாமீனில் விடுவிக்கப்பட்டதையடுத்து, சசிகலா மற்றும் ஓபிஎஸ் அணிகள் இணைவதற்கு 2 மாதங்கள் காலக்கெடு விதித்தார்.

ஆனால் அணிகள் இணைவதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பதால், நாளை முதல் ஆக்டிவ் பாலிடிக்ஸில் இறங்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் திருவாரூரில் நடைபெறவுள்ள எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவுக்கான பந்தல்கால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், ஓ.எஸ்.மணியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், அதிமுக தலைமை அலுவலகம் வருவது குறித்து டி.டி.வி.தினகரன் தங்களிடம்  எதுவும் பேசவில்லை என தெரிவித்தார்.

அதிமுகவின் இரு அணிகளும் வருத்தத்துடன் இருந்தாலும் விரைவில் பேச்சுவார்த்தை நடைபெறும் என தெரிவித்தார்.வருத்தத்துடன் இருக்கும் இரு அணிகளையும் ஒருங்கிணைப்போம் என்றும் அமைச்சர் திண்டக்கல் சீனிவாசன் தெரிவித்தார்.