இது வெறும் இடைக்கால ஏற்பாடே! பி.ஜே.பி.யுடன் கூட்டணி சேர்வார் தினகரன்!: யார், யார் சொன்னது?

உலகின் மிக சிறந்த சொல் ‘செயல்’தான். ஆனாலும் செயலுக்கு  இணையான வீரியங்கள் சொல்லுக்கும் உண்டு. அதிலும் சமூகத்தில் முக்கிய நபர்கள் சொல்லும் சொல்லுக்கு  ஏற்படும் பக்க விளைவுகளும், வீரியமும் தனியே. 
அந்த வீரியமிக்க ‘சொற்களை’ டீல் செய்வதுதான் இந்த பகுதி. 

*    நாங்கள் நாட்டை உள்நாட்டில் மட்டும் பாதுகாக்கவில்லை. தேவைப்பட்டால் எல்லை தாண்டியும் சென்று நம் நாட்டை பாதுகாப்போம். பாகிஸ்தானுடன் இந்தியா நட்பையே விரும்புகிறது ஆனால் அவர்களுக்கு இதில் ஆர்வம் இல்லை. 
-    ராஜ்நாத் சிங்

*    திராவிடம் இல்லாத தமிழகம் என்று முழங்கும் சக்திகளுக்கு பலம் சேர்க்கும் விதமாக டி.டி.வி. தினகரனின் நடவடிக்கை அமைந்துள்ளது. 
-    நாஞ்சில் சம்பத்

*    நான் ஏதோ பச்சை படுகொலை செய்துள்ளேன் என்று நாஞ்சில் சம்பத் கூறியுள்ளார்! அவர் பேசுவதில் வல்லவர். எங்களை பொறுத்தவரை புதிய அமைப்பு துவங்கியது, வெறும் இடைக்கால ஏற்பாடே!
-    தினகரன்

*    எனக்கு வந்த தகவலின் படி பி.ஜே.பி.யில் இருந்து எடப்பாடி பழனிசாமி, பன்னீர்செல்வம் இருவரும் மிரட்டப்பட்டதாகவும், அதன் காரணமாகவே என் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் தெரிகிறது. 
-    கே.சி.பழனிசாமி

*    தெலுங்கு தேசம் கட்சி சரியான நேரத்தில் முக்கியமான முடிவு எடுத்திருக்கிறது. பி.ஜே.பி.யின் செயல்பாடுகளை மக்கள் கவனித்து வருகிறார்கள். அக்கட்சிக்கு மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள். 
-    சந்திரபாபு நாயுடு

*    காவிரி மேலாண்மை வாரிய விவகாரத்தில் பிரதமரை நேரடியாக சந்தித்து பேச ஆளுங்கட்சியான அ.தி.மு.க.வுக்கே டைம் கொடுக்காதபோது, எதிர்கட்சிகளை அழைப்பார்கள் எப்படி நம்புவது?
-    ஸ்டாலின்

*    அரசியல் எனக்கும், ரஜினிக்கும் இடையில் நிச்சயம் கருத்து வேறுபாட்டை ஏற்படுத்தும். திரையுலகில் நானும் ரஜினியும் போட்டியாளர்களாக இருந்தாலும் கூட எங்களுக்குள் ஒரு நட்பு நிலவியது. ஆனால் அரசியலில் அதை எதிர்பார்க்க முடியாது.
-    கமல்ஹாசன்

*    மத்திய அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவார்களா என்பது பற்றி எங்களுக்கு தெரியாது. அப்படி நடக்கும் பட்சத்தில் ஆதரவு அளிப்பதா என்பது குறித்து கட்சி தலைமைதான் முடிவு செய்யும். 
-    தம்பிதுரை

*    எம்.ஜி.ஆர்., கருணாநிதி, ஜெயலலிதா போன்றோர் சினிமா மூலமாக அரசியலுக்கு வந்தவர்கள்தானே! அவர்கள் நல்லாட்சி தந்தார்களே. ரஜினி, கமல் இருவரும் எனது நெருங்கிய நண்பர்களே. அவர்கள் இருவருக்காகவும் தேர்தலில் பிரச்சாரம் செய்வேன். 
-    பிரபு

*    அ.தி.மு.க.வின் ஓட்டு பலவாறாக பிரியும். அதில் தினகரனையும் ஒரு தரப்பு ஆதரிக்கும். ‘பி.ஜே.பி.யுடன் கூட்டணி சேரமாட்டேன்’ என்று தினகரன் இன்று சொன்னாலும் கூட, நாளையும அதே நிலையில் இருப்பார் என்று சொல்ல முடியாது. 
-    நல்லகண்ணு