காவிரி விவகாரத்தில் மத்திய பாஜக அரசு தமிழகத்திற்கு எதிராக செயல்படுவதை திருத்திக்கொள்ள வேண்டும். இல்லையென்றால் பாஜகவை மக்கள் திருத்துவார்கள் என தினகரன் எச்சரித்துள்ளார்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தினகரன் தஞ்சாவூரில் உண்ணாவிரதம் இருந்துவருகிறார். தஞ்சாவூர் திலகர் திடலில் தினகரன் உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகிறார். இதில், தினகரன் ஆதரவாளர்கள், அம்மா மக்கள் முன்னேற்றக் கழக தொண்டர்கள், விவசாயிகள் என ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டுள்ளனர்.

உச்சநீதிமன்ற இறுதி தீர்ப்பின்படி, மேலாண்மை வாரியம் தான் அமைக்க வேண்டும். காவிரி மேற்பார்வை ஆணையம் என்ற அதிகாரமற்ற அமைப்பை அமைக்கும் முயற்சியை மத்திய அரசு கைவிட வேண்டும். அதிகாரமிக்க மேலாண்மை வாரியத்தை நீதிமன்றம் விதித்த கால அவகாசத்துக்குள் அமைக்க வேண்டும் என வலியுறுத்தி இந்த உண்ணாவிரதத்தை தினகரன் மேற்கொண்டுள்ளார்.

அப்போது, செய்தியாளர்களிடம் பேசிய தினகரன், மேலாண்மை வாரியம் அமைக்க கேட்டால், மேற்பார்வை ஆணையத்தை அமைக்க மத்திய அரசு முயற்சிக்கிறது. இந்த முயற்சியை கைவிட்டு மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும். தமிழகத்திற்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்திருக்கும் மத்திய பாஜக அரசு திருந்த வேண்டும். இல்லையென்றால் மக்கள் திருத்துவார்கள் என தினகரன் எச்சரித்துள்ளார்.