dinakaran using chandralekha to defeat ops team

பன்னீர் அணிக்கு பெருகிவரும் ஆதரவை தடுக்க, பல்வேறு ஆயுதங்களை கையில் எடுக்க திட்டமிட்டுள்ளது தினகரன் அணி.

அதன் ஒரு பகுதியாக, ஐ.ஏ.எஸ் அதிகாரி, சந்திரலேகா மீது திராவகம் ஊற்றப்பட்ட வழக்கில், சுர்லாவை அழைத்து வந்ததே மதுசூதனன்தான் என்று பிரச்சாரம் செய்ய முடிவு செய்துள்ளனர்.

அந்த வழக்கில் மதுசூதனன் பங்கை விளக்கி, துண்டு பிரசுரம் அச்சடித்து, அதை வீடு தோறும் விநியோகிக்கவும் ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

அதற்காக, சுப்பிரமணியன் சாமியும் பல்வேறு ஐடியாக்களை கொடுத்து வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்த பிரச்சாரம், பன்னீர் அணியை பலவீனப்படுத்தும் என்று தினகரன் தரப்பினர் உறுதியாக நம்புகின்றனர்.

அதேசமயம், இந்த பிரச்சாரம் திமுகவிற்கு சாதமாக திரும்பி விடாமலிருக்கவும் கவனமாக கையாண்டு வருகிறது தினகரனின் அணி.

சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலாவுக்கு தண்டனையை உறுதி செய்த உச்சநீதி மன்ற தீர்ப்பை, பட்டாசு வெடித்து கொண்டாடிய பன்னீர் அணியினர், அந்த வழக்கின் முதல் குற்றவாளி ஜெயலலிதா என்பதை மறந்தது, கடுமையான விமர்சனத்திற்கு உள்ளாயினர்.

அதேபோல், சந்திரலேகா மீது திராவகம் வீசப்பட்ட வழக்கில், மதுசூதனனை மையப்படுத்தி வெளியிடப்படும் துண்டு பிரசுரம், ஜெயலலிதாவின் புகழுக்கே களங்கம் விளைவிக்கும் என்று அதிமுகவினர் கூறி வருகின்றனர்.

எப்படியோ, எல்லா அவதூறுகளும் ஜெயலலிதாவுக்கே, என்பதை மறந்து இரு அணிகளும் போட்டி போட்டுக்கொண்டு மீண்டும், மீண்டும் ஜெயலலிதாவின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தி வருகின்றன என்பதே உண்மை.